2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும்  குரூப் 2ஏ தேர்வுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்று வெளியிட்டார். 


அதன்படி, குரூப் 2 மற்றும்  குரூப் 2ஏ தேதி வரும் மே 21 ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும், மார்ச் 23 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், குரூப் 2 மற்றும்  குரூப் 2ஏ தொடர்பான அறிவிப்பாணை வருகிற பிப். 23 ம் தேதி டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


குரூப் 2, 2 ஏ - குரூப் 4 - காலிப் பணியிடங்கள் எத்தனை?


குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான காலி பணியிடங்கள் - 5,831


குரூப் 4 தேர்வில் பழைய காலிப் பணியிடம் 5,255, புதிய காலிப் பணியிடம் 3,000


முன்னதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்திட திட்டமிடப்பட்டு வருகிறது. குறிப்பாக குரூப்-1 தேர்வுகளை மே மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்- 2 ஏ தேர்விற்கான அறிவிப்பு இன்று வெளியானதை தொடர்ந்து, குரூப்- 4 தேர்வு குறித்து மார்ச் மாதத்தில் அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும்.


தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்தகட்ட தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படுவர்.



அதேபோல தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் இனிவரும் காலங்களில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்றும், அதேபோல பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண