குரூப் 2, 2ஏ தேர்வு முறை, தேர்வு மையங்கள், கட்டுப்பாடுகள் குறித்து தவற விடக்கூடாத முக்கியத் தகவல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.


இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:


* குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி மே 21ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. 


* இதற்காகத் தேர்வர்கள் 8.30 மணிக்கு வர வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 8.59 மணி வரை மட்டுமே தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் 12.45 மணி வரை தேர்வறைக்குள் இருக்க வேண்டும். 


* தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 


* ஆண் தேர்வர்கள் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 பேரும், பெண் தேர்வர்கள் 6 லட்சத்து 81 ஆயிரத்து 89 பேரும்  விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 48 பேர் விண்ணப்பித்துள்ளனர். 14 ஆயிரத்து 531 மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பித்துள்ளனர். 79 ஆயிரத்து 942 பேர் தமிழ் வழியில் பயின்றதாக விண்ணப்பம் செய்துள்ளனர். 


* தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 


* கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளன. இவ்வாறு 993 குழுக்கள் செயல்பட உள்ளன. 6,400 ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


* பொது ஆங்கிலம் பகுதியில் தேர்வெழுத 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். பொதுத் தமிழ் பகுதியில் தேர்வெழுத 9 லட்சத்துக்கு 46 ஆயிரத்து 589 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 


* முதல்நிலைத் தேர்வை 3 முறை இலவசமாக எழுதலாம். இந்தப் பிரிவின் கீழ், 6 லட்சத்து 93 ஆயிரத்து 361 பேர் இலவசமாகத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர்.  


* தேர்வு முழுவதும் கொள்குறித் தேர்வு வகையில் நடைபெற உள்ளது. 200 கேள்விகள் கேட்கப்படும். இதில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் தலா 100 கேள்விகள் இருக்கும். அவற்றுக்கு 300 மதிப்பெண்கள். 




தேர்வு முடிவுகள்


* ஜூன் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. முதன்மைத் தேர்வை 2022 செப்டம்பர் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 


காலி இடங்கள் 


* அறிவிப்பாணை வெளியிட்டபோது குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்களாக மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறிய அளவில் மாற்றங்கள் இருக்கலாம். 


* 1 பணியிடத்துக்கு 10 பேர் என்ற வீதத்தில் முதன்மைத் தேர்வுக்குத் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதாவது சுமார் 550 காலிப் பணியிடங்களுக்கு, 5,500 பேர் முதன்மைத் தேர்வுக்கு அனுப்பப்படுவர். 


* ஒரே மதிப்பெண்ணை நிறையப் பேர் பெற்றுள்ள சூழல் உள்ளிட்ட சில நேரங்களில் மட்டும் 1:12 என்ற வீதத்தில் தேர்வர்களை அனுமதிப்போம்.


தேர்வர்கள் எங்கு அதிகம்; எங்கு குறைவு?


* சென்னையில் அதிகபட்சமாக 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுத உள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5 ஆயிரத்து 624 பேர் தேர்வு எழுத உள்ளனர். 


* அதேபோல மதுரையில் 64 ஆயிரத்து 82 பேரும், சேலத்தில் 63 ஆயிரத்து 437 பேரும் திருச்சியில் 50 ஆயிரத்து 19 பேரும் கோவையில் 48 ஆயிரத்து 39 பேரும் தேர்வு எழுதுகின்றனர். நாகப்பட்டினத்தில் 8 ஆயிரத்து 598 பேரும் மயிலாடுதுறையில் 11 ஆயிரத்து 561 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.


இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.