டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், அதன் கேள்வித்தாள் எப்படி இருந்தது? தேர்ச்சி பெற கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு தேவைப்படும்? இதோ பார்க்கலாம்.


குரூப் 2 பதவிகளில் 507 காலியிடங்கள், குரூப் 2 ஏ பதவிகளில் 1,820 காலியிடங்கள் என மொத்தம் 2,327 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இதற்கு, தமிழகம் முழுவதும் இருந்து 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 2,763 மையங்களில் 5.81 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இவர்களுக்கான தேர்வுத் தாள் பற்றியும் கட் ஆஃப் குறித்தும் அறியலாம்.


இதுகுறித்து போட்டித் தேர்வு பயிற்சியாளர்கள் சிலர் ABP NADU-விடம் கூறியதாவது:


’’கடந்த குரூப் 4 தேர்வு வினாத் தாளுடன் ஒப்பிடும்போது, இந்த குரூப் 2 தேர்வு கடினம்தான். வழக்கமாக மொழித் தாள்தான் முதலில் இருக்கும். அதாவது ஆங்கிலம் அல்லது தமிழ் கேள்வித்தாள் முதலில் கேட்கப்படும். தற்போது முதலில் பொது அறிவு கேள்விகள் இடம்பெற்றிருந்தன.


அதிகரித்த ஆப்சென்ட் தேர்வர்களின் எண்ணிக்கை


வழக்கமாகவே தேர்வை எழுதாத தேர்வர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவில் இருக்கும். 6- 7 லட்சம் பேர் ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்கும் நிலையில், இந்த முறை சுமார் 8 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில், தேர்வை எழுதாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.




வினாத்தாள் எப்படி?


ஆங்கில வினாத் தாளுடன் ஒப்பிடும்போது தமிழ் வினாத்தாள் கடினமாக இருந்தது. பொதுவாக ஒரு தேர்வரால், 30 - 40 நாட்களில் ஆங்கில பாடத்திட்டத்தைப் படித்து முடிக்க முடியும். ஆனால் தமிழ் பாடத்தைப் படிக்க குறைந்தது 4 - 5  மாதங்கள் எடுக்கும். இதனால் கேள்விகளும் சற்றே கடினமாக இருக்கின்றன. அதேபோல தமிழ் பாடத்தில் கேள்விகள் வெளியில் இருந்தும் கேட்கப்படுகின்றன. ஆங்கிலப் பாடத்திட்டத்தில் பெரும்பாலும் பாடப் புத்தகத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன.


என்ன செய்ய வேண்டும்?


தமிழ் மொழியைத் தகுதித் தேர்வாக மட்டுமே வைத்துவிடலாம். கட் – ஆஃப் மதிப்பெண்ணுக்கு தமிழை எடுத்துக்கொள்ளக் கூடாது. அல்லது தமிழ் பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும். 


சர்ச்சைக்குரிய கேள்விகள்


தாலாட்டுப் பாடலில் தாய்மாமன் கட்டி வரும் வேட்டி எந்த நிறம் என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ள. ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வியும் சற்றே விவாதத்துக்கு உரிய வகையில் அமைந்திருந்தது.


கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும்?


அனைத்து தனியார் விடைக் குறிப்புகளையும் பார்க்கும்போது, சில விடைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன. அரசிடம் இருந்து விடைக் குறிப்பு வெளியானால் மட்டுமே, சரியாக கட் -ஆஃப் எவ்வளவு இருக்கும் என்பதைக் கணிக்க முடியும்.


எனினும் தற்போதைய நிலையில், குரூப் 2 தேர்வு கடினமான இருந்தாலும், 2300-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இதனால், 155-க்கும் மேல் சரியான விடைகளை நம்பிக்கையுடன் இருக்கலாம்’’.  


இவ்வாறு பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.