குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வர்கள் தங்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளது.

சார் பதிவாளர், துணை வரி வருவாய் அலுவலர், வன அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.

அந்த வகையில், 537 காலி இடங்களை நிரப்ப 2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வுகள் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்று இருந்தன. முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வுக்கு 7,93,967 தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், 7,93,966 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில், 2,10,499 பேர் குரூப் 2 தேர்வை எழுதவில்லை. மொத்தம் 5,83,467 பேர், 537 காலி இடங்களை நிரப்பத் தேர்வை எழுதினர். 

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அவகாசம் நீட்டிப்பு

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 15ஆம் தேதி வெளியாகின. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வர்கள் தங்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அளிக்கப்பட்ட அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து இன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம் தெரிவித்து உள்ளதாவது:

’’கடந்த ஆண்டு ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கை எண்‌வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு (11) ல்‌ குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பணிகள் உள்ள பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில்‌ நேரடி நியமனம்‌ செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களால்‌ சான்றிதழ்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டதில்‌, சான்றிதழ்‌ சரிபார்ப்புக்கு பின்னர்‌ சில தேர்வர்கள்‌ உரிய சான்றிதழ்களை குறைபாடாக / சரியாக பதிவேற்றம்‌ செய்யப்படாமல்‌ உள்ளது கண்டறியப்பட்டுள்‌ளது.

ஜூன் 20 வரை கடைசி வாய்ப்பு

எனவே இத்தகைய தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும்‌ விதமாக 11.06.2025 முதல்‌ 20.06.2025 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும்‌ சரியான சான்றிதழ்களை மறு பதிவேற்றம்‌ செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இத்தகவல்‌ அந்தத் தேர்வர்களுக்கு மட்டும்‌ குறுஞ்செய்தி மற்றும்‌ மின்னஞ்சல்‌ மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அத்தேர்வர்கள்‌ அணைவரும்‌ மின்னஞ்சலில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில்‌ ஒருமுறைப்‌ பதிவு தளம்‌ (OTR) வாயிலாக பதிவேற்றம்‌ செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம்‌ செய்யாத தேர்வர்களின்‌ உரிமைகோரல்‌ விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படும்‌’’ என டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்‌ தெரிவித்துள்ளார்.