குரூப் 1 முதல்நிலைத் தேர்வை 2.38 லட்சம் தேர்வர்கள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில், 1 லட்சத்து 59 ஆயிரத்து 973 பேர் தேர்வை எழுதி உள்ளனர். 78 ஆயிரத்து 274 பேர் தேர்வை எழுதவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. 


தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள 16 துணை ஆட்சியர் இடங்கள், 23 துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பணியிடங்கள், 14 வணிக வரித்துறை உதவி ஆணையர் பணியிடங்கள், 21 கூட்டுறவு துறை துணை பதிவாளர் பணியிடங்கள், 14 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பணியிடங்கள், ஒரு மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பணியிடம் மற்றும் ஒரு மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பணியிடம் என மொத்தம் 90 இடங்கள் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.


78 ஆயிரத்து 274 பேர் தேர்வை எழுதவில்லை


இந்த 90 பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 1 முதல்நிலைத் தேர்வை 2.38 லட்சம் தேர்வர்கள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில், 1 லட்சத்து 59 ஆயிரத்து 973 பேர் தேர்வை எழுதி உள்ளனர். 78 ஆயிரத்து 274 பேர் தேர்வை எழுதவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்று (ஜூலை 13) காலை 200 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்பட்டு இருந்தன.


தேர்வுக்காக 38 மாவட்டங்களிலும் 797 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டன. தேர்வைக் கண்காணிக்க ஒரு அறைக்கு ஒருவர் வீதம் 797 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் மட்டும் 124 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டன.


இந்த நிலையில், குரூப் 1 முதல்நிலைத் தேர்வு எப்படி இருந்தது என்று பார்க்கலாம்.


செல்வகுமார், முதுகலை மாணவர்


என்னைப் பொறுத்தவரை குரூப் 1 தேர்வு எளிதாகவும் இல்லாமல் கடினமாகவும் இல்லாமல், மீடியமாகக் கேட்கப்பட்டிருந்தது. வரலாறு, இந்திய அரசியலமைப்பு கேள்விகள் எளிதாகக் கேட்கப்பட்டு இருந்தன. அதில் கேள்விகள் அதிகம் ட்விஸ்ட் செய்யப்படவில்லை.


காலை உணவுத் திட்டம் மற்ற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பது உள்ளிட்ட தற்போதைய கால கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. கேள்விகள் அத்தனை கடினமில்லாததால், ஒட்டுமொத்த அளவில் கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.


கிருத்திகா, தனியார் நிறுவன ஊழியர்


2022ஆம் ஆண்டு குரூப் 1 முதல்நிலைத் தேர்வுடன் ஒப்பிடும்போது, இந்த முறை கேள்விகள் எளிதாகவே இருந்தன. எனினும் வழக்கமான ட்விஸ்ட்டுகளும் கேள்விகளில் வைக்கப்பட்டிருந்தன. கணிதக் கேள்விகள் அதிக நேரத்தைக் கோருவதாக இருந்தன. இலக்கியப் பகுதிகளில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. தினசரி நிகழ்வுகளைப் பொறுத்தவரையில், வழக்கத்துக்கு மாறான வகையில், கேள்விகள் இருந்தன.


இவ்வாறு தேர்வர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.