2024ஆம் ஆண்டில் பிப்ரவரி 1 முதல் 15 வரையிலான 15 நாட்களில் 1253 பேர், அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இதற்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி, தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்யும். எனினும் கடந்த சில ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி நடைமுறையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தேர்வர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


டிஎன்பிஎஸ்சியில் தொடர் தாமதம்


குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளின் முடிவுகள் வெளியாவதிலும் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி-க்குத் தலைவர் நியமிக்கப்படாததே தாமதத்துக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் குரூப் 4 தேர்வு முடிவுகள் கூட, 8 மாதங்கள் கழித்தே வெளியாகின. அதேபோல குரூப் 2 தேர்வு முடிவுகளும் நீண்ட தாமதத்துக்குப் பிறகே வெளியாகின.


இந்த நிலையில், பிப்ரவரி 1 முதல் 15 வரையிலான 15 நாட்களில் 1253 பேர், அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபாலசுந்தர்ராஜ் கூறும்போது, ‘’தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 01.02.2024 முதல் 15.02.2024 வரையிலான காலத்தில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 நபர்களும், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 நபர்களும், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவிப் பொறியாளர் (கட்டிடவியல்) உள்ளிட்ட பதவிகளுக்கு 752 நபர்களும், உதவிப் புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 நபர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


1253 நபர்கள் தேர்வு


அதேபோல பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1253 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’’ என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


இதற்கு இடையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 1598 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் வழங்கினார். 


விமர்சனங்களுக்கு பதிலா?


இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி செயல்பாடுகளில் சுணக்கம் நிலவி வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக, பதினைந்தே நாட்களில், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1253 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிக்கையை வெளியிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.