ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான விடைத் தாள்கள் மறு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

Continues below advertisement

இதுகுறித்து இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

‘’ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) (அறிவிக்கை எண் 08/2025) கடந்த ஜூலை மாதம் 20, 22 ஆகிய தேதிகளிலும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (அறிவிக்கை எண் 09/2025) ஆகஸ்ட் 4 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றன. கணினி வழித் தேர்வாக இந்தத் தேர்வு நடந்தது.

Continues below advertisement

விடைத் தாள்கள் மறு பதிவேற்றம்

இந்தத் தேர்வுகளுக்கான விடைத் தாள்கள் சில தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க தேர்வாணைய இணையதளத்தில் இன்று (அக். 23) மறு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

விருப்பப்படும் தேர்வர்கள், தங்களுடைய ஒருமுறை பதிவு எண் வாயிலாக விடைத் தாளினை உரிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள காலம் 23.10.2025 முதல் 21.11.2025 வரை என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது

மேற்குறிப்பிட்டுள்ள தேர்வுகள் தொடர்பான விடைத் தாள்களை (கணினி வழித் தேர்வு) வழங்கக் கோரி, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு பிறகு பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இந்த விடைத் தாள்களை, மதிப்பெண்களை https://tnpsc.gov.in/English/OpenDataPolicy.aspx என்ற இணைய முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். 

கூடுதல் தகவல்களுக்கு: https://tnpsc.gov.in/