டி.என்.பி.எஸ்.சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. டி.என்.பி.எஸ்.சி தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி வேறு ஒருவரை தேர்வு செய்ய ஆளுநர் 
பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. 


சைலேந்திர பாபு நியமனம்


1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு. நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராக அதாவது சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்தவர். சைலேந்திர பாபு கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி அன்று ஓய்வு பெற்றார்.


அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான தமிழக அரசு உயர்மட்டக் குழுவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டது.


இதற்கிடையில், டிஎன்பிஎஸ்சி அமைப்பின் தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்தது. சம்பந்தப்பட்ட கோப்பை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிய நிலையில், அவர் கோப்பைத் திருப்பி அனுப்பினார். 


ஆளுநர் சரமாரிக் கேள்விகள்


அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்துஆளுநர் விளக்கம் கேட்டு இருந்தார். அதேபோல தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா? எனவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் ஓய்வுக்கான உச்ச வரம்பு 6 ஆண்டுகள் அல்லது 62 வயது என்ற சூழலில், 61 வயது நபரை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் ஆளுநர் கேட்டதாகத் தகவல் வெளியானது.


வெளிப்படைத்தன்மை இல்லை


இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமிப்பது தொடர்பாக உரிய விளக்கங்களுடன் கூடிய கோப்புகளை தமிழக அரசு மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியது. இந்த கோப்பை ஆளுநர்  நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. டி.என்.பி.எஸ்.சி தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி வேறு ஒருவரை தேர்வு செய்ய ஆளுநர் பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. 


இதற்கு வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது, ’’தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வு வாரியத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவராக நேர்மையாளரான முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது. 


ஆனால் சைலேந்திர பாபுவுக்கு அந்தத் தகுதி இல்லை என்று தமிழ்நாடு அரசின் பரிந்துரையை கவர்னர் ரவி நிராகரித்திருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமான சர்வதிகார முடிவாகும். தமிழக அரசு செய்கின்ற பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மத்திய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகின்ற தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.