தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை முறைப்படி ஒவ்வொரு ஆண்டும் நடத்துவதையும், அதற்கான முடிவுகளை வெளியிடுவதையும் தாமதப்படுத்தி வரும் தி.மு.க. அரசிற்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசுப் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டுமென்றால், மக்கள் நலத் திட்டங்கள் தங்குதடையின்றி நடைபெற வேண்டுமென்றால், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அந்தப் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட
வேண்டும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்மூலமும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும் காலிப் பணியிடங்கள் தொய்வின்றி அவ்வப்போது நிரப்பப்பட்டு வந்தன.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் ஆண்டுக்காண்டு பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகளை குறித்த காலத்தில் நடத்தி, குறித்த காலத்தில் முடிவுகளை வெளியிட்டு காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் காலிப் பணியிடங்களுக்கான தேர்வினை நடத்துவதிலும், முடிவுகளை வெளியிடுவதிலும் மிகப் பெரிய அளவில் தாமதம் ஏற்படுகிறது. இது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான பணியிடங்கள் அரசுத் துறைகளில் காலியாக உள்ளன. இலட்சக்கணக்கான இளைஞர்கள் குரூப்-4, குரூப்-2, குரூப் 2ஏ மற்றும் குரூப் 1 போன்ற தோ்வுகளை எதிர்பார்த்து அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 15,000 பணியிடங்கள்கூட நிரப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஒரே ஒருமுறை தான் கிட்டத்தட்ட 10,000 பணியிடங்களுக்கான குரூப்-4 நடத்தப்பட்டு, மிகுந்த இழுபறிக்குப் பின் அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு, தற்போது பணியாளர் நியமனம் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
வெறும் 15,000 பணியிடங்கள்
கிட்டத்தட்ட 5,000 பணியிடங்களுக்கான குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிந்தும், அதற்கான முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை. கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் பணியிடங்கள் நிரப்ப வேண்டிய இடத்தில், வெறும் 15,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்பது வேதனையளிக்கிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தேர்வு குறித்து ஓர் ஆண்டுத் திட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி, குரூப்- 4 பதவிகளுக்கான அறிவிக்கை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில், இதற்கான
அறிவிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இது நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்று வந்துள்ள செய்தி இளைஞர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்ந்து சில மாதங்கள் தள்ளிப் போகுமோ என்ற அச்சம் இளைஞர்கள் மத்தியில் நிலவுகிறது.
முறைப்படி பார்த்தால், 2023ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு இருக்க வேண்டும். இதைத்தான் செய்யவில்லை என்றால், ஆண்டு திட்டத்தின்படியாவது அறிவிக்கையை வெளியிட்டு இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. இதேபோல், குரூப்-। தேர்விற்கான அறிவிக்கை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை வெளியிடப்படவிலலை.
இரட்டை வேடம் போடுகிறதோ?
சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், அவ்வப்போது காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஆனால், 'சமூக நீதி”, “சமூக நீதி” என்று அடிக்கடி கூறும் தி.மு.க. அரசு, அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மெத்தனமாக இருப்பதைப் பார்க்கும்போது, இதிலும் இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் 55,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அண்மையில் கூறியிருந்தார். தற்போதுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது 55,000 என்பது வெகு குறைவான எண்ணிக்கை. குரூப்-।/ பதவிகளுக்கான தோவுகளை எதிர்நோக்கி இளைஞர்கள் காத்துக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, குரூப்- பதவிகளுக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, தேர்வினை நடத்தி, முடிவுகளை வெளியிடவும், இதேபோன்று குரூப்-। மற்றும் குரூப்-।। தோவிற்கான அறிவிக்கைகளை வெளியிட்டு, அவற்றிற்கான தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடவும், இதன்மூலம் வேலையில்லாத் திண்டாட்டத்தினை போக்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.