12ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ தவறிய மாணாக்கர்களின்‌ உயர்கல்வி கனவை நனவாக்க துணைத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள்‌ அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ இந்தக் கல்வியாண்டே (2025-26) இளநிலை பட்டப்படிப்பில்‌ சேர விண்ணப்பிக்கலாம்‌ என்று உயர் கல்வித்‌துறை அமைச்சர்‌ முனைவர்‌ கோவி. செழியன்‌ தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து மேலும் உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ தெரிவித்துள்ளதாவது:

ஏழை, எளிய மாணாக்கர்கள்‌ உயர்கல்வியினை பெற வேண்டும்‌. அனைவருக்கும்‌ சமமான உயர்கல்வி கிடைத்திட வேண்டும்‌ என்பதற்காக, அரசுக்‌ கல்லூரி இல்லாத பகுதிகளில்‌ நடப்பாண்டில்‌ மட்டும்‌ புதியதாக 15 அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளை தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சரால்‌ ஆணையிடப்பட்டு, அவ்விடங்களில்‌ கல்லூரிகள்‌ தொடங்கப்பட்டுள்ளன.

மேலும்‌, மாணவர்களின்‌ தேவைக்கேற்ப 15,000-க்கும்‌ மேற்பட்ட மாணாக்கர்‌ சேர்க்கை இடங்கள்‌ பல்வேறு பாடப்பிரிவுகளில்‌ உருவாக்கப்பட்டன.

Continues below advertisement

மே 7ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப்‌ பதிவு

தமிழ்நாடு அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌கல்லூரிகளில்‌ 2025-2026ஆம்‌ கல்வியாண்டிற்கான மாணாக்கர்கள்‌ சேர்க்கைக்கான விண்ணப்பப்‌ பதிவு 07.05.2025-ல்‌ தொடங்கி தற்போது முதலாம் ஆண்டு வகுப்புகள்‌ தொடங்கப்பட்டன.

12-ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ தவறிய மாணாக்கர்கள்‌ தாங்கள்‌ உயர்கல்வி வாய்ப்பை தவறவிட்டோம்‌ என்று சோர்வடைந்து விடாமல்‌ இருக்க அவர்கள்‌ உயர்கல்வி வாய்ப்பினை பெற்றிட வேண்டும்‌ என்ற அடிப்படையில்‌ அவர்களுக்கு உடனடியாக துணைத்‌ தேர்வு நடத்தப்பட்டு தற்போது தேர்வு முடிவுகள்‌ வெளியிடப்பட்டுள்ளன.

முதலாமாண்டு மாணவர் சேர்க்கை

இதில்‌ தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள்‌ இக்கல்வியாண்டே உயர்கல்வி பயில ஏதுவாக அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ இளநிலை முதலாமாண்டு மாணாக்கர்கள்‌ சேர்க்கைக்கான விண்ணப்பப்‌ பதிவினை www.tngasa.in இணையதள முகவரியில்‌ விண்ணப்பிப்பதற்கு உரிய வழிவகைகள்‌ செய்யப்பட்டுள்ளன.

எனவே, மாணாக்கர்கள்‌ மேலே குறிப்பிட்டு்ள்ள இணையதளத்தில்‌ விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.tngasa.in/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும்.

சந்தேகங்களுக்கு: tngasa2025@gmail.com

தொலைபேசி எண்கள்: 044 - 24343106, 044 - 24342911