தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர நடத்தப்படும் கலந்தாய்வில், இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், துணைக் கலந்தாய்வு தொடங்கி உள்ளது.  

இரண்டு சுற்றுக் கலந்தாய்வின் முடிவில் நிரம்பாத இடங்களை நிரப்ப, இந்த துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்காதவர்களும், துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பி.இ./ பி.டெக். பொறியியல்‌ பட்டப்படிப்பு மாணாக்கர்‌ சேர்க்கைக்கான துணைக்‌ கலந்தாய்வு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை 2025-26 பொதுக்‌ கலந்தாய்வின்‌ முடிவில்‌ நிரப்பப்படாமல்‌ உள்ள இடங்களுக்கு, 12-ஆம்‌ வகுப்பு பொது மற்றும்‌ தொழிற்‌கல்வி‌ (Vocational) பயின்று சிறப்பு துணைத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த தமிழ்நாட்டைச்‌ சார்ந்த மாணாக்கர்கள்‌ மற்றும்‌ 2025- பொதுக்‌ கலந்தாய்வில்‌ கலந்து கொள்ள இயலாத மாணாக்கர்களும்‌ https://www.tneaonline.org  என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்‌.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.dte.tn.gov.in ஆகிய இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பித்தல்‌ வேண்டும்‌. இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌, தங்களின்‌ விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையம்‌ (TFCs) அனைத்து மாவட்டங்களிலும்‌ அமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

OC/ BC/ BCM/ MBC & DNC ரூ. 500/-

SC/SCA/ST - 250/-

பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்‌ Debit Card / Credit Card / Net Banking / UPI இணையதளம்‌ வாயிலாக செலுத்தலாம்‌. இணையதளம்‌ வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌, “The Secretary, TNEA, Payable at Chennai, என்ற பெயரில்‌ வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையம்‌ (TFCs) வாயிலாக சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி எப்போது?

துணைக் கலந்தாய்வுக்கு இணையம் மூலம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணாக்கர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும்‌போது அசல்‌ சான்றிதழ்களை இணையதளம்‌ வாயிலாக சரிபார்க்கும்‌ பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையத்தினை தேர்வு செய்து கொள்ளவேண்டும்‌.

மேற்கண்ட அசல்‌ சான்றிதழ்களை இணையதளம்‌ வாயிலாக சரிபார்க்கும்போது ஏதேனும்‌ குறைபாடுகள்‌ கண்டறியப்பட்டால்‌, அந்த குறிப்பிட்ட மாணாக்கரின்‌ பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்‌ மற்றும்‌ மின்னஞ்சல்‌ முகவரிக்கு தகவல்‌ அனுப்பப்படும்.

குறிப்பிட்ட தேதி மற்றும்‌ நேரத்தில்‌ டிஎஃப்சி மையத்திற்கு நேரடியாக வந்து சரிசெய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும்‌ விவரங்களைப்‌ பெற தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்‌: 1800-425-0110.

இ – மெயில்: tneacare@gmail.com

இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், துணைக் கலந்தாய்வு தொடங்கி உள்ளது. இரண்டாம் சுற்றின் மூலம் 80,650 பேருக்குத் தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது.