பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (ஜூலை 10ஆம் தேதி) வெளியாக உள்ளது.


தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகின. அன்றைய தினமே பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவும் தொடங்கியது. இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் இடங்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச் சாளர முறையில் இணைய வழிக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.


1.98 லட்சம் பேர் சான்றிதழ் பதிவேற்றம்


இந்த நிலையில், 2024- 25ஆம் கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தனர். எனினும் இதில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 853 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, உரிய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து இருந்தனர். அவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி ரேண்டம் எண் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


ரேண்டம் எண் ஒதுக்கப்பட்ட பின்பு, ஜூன் 13 முதல் 30ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலமாகவே சரிபார்க்கப்பட்டன.


அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார் 


தொடர்ந்து பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நாளை வெளியிட உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள மாநிலத் தொழில்நுட்பக்கல்வி ஆணையரகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார். இணையம் மூலம் தரவரிசைப் பட்டியலைப் பெறலாம்.


தொடர்ந்து இதில் ஏற்படும் குறைகளை சேவை மையம் வாயிலாக நிவர்த்தி செய்ய 11.07.2024 முதல் 20.07.2024 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


கலந்தாய்வு எப்போது?


வழக்கமாக மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகே பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். இதன்படி, ஆகஸ்ட் மாதத்தில்தான் கலந்தாய்வு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கூடுதல் விவரங்களுக்கு: https://www.tneaonline.org என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


கூடுதல் தகவல்களைப் பெற: தொடர்பு எண்‌: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்‌: 1800 - 425 - 0110


இ- மெயில் முகவரி: tneacare@gmail.com