தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. 


தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கை-2019 -க்கான இணையவழி விண்ணப்ப சேவை கடந்த ஜூலை 26-ஆம் தேதி தொடங்கியது. பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கு விண்ணப்பக் கட்டணமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.250-ம் இதர வகுப்பினர் ரூ.500-ம் கட்டணம் செலுத்த வேண்டும். சிறப்பு ஒதுக்கீட்டுப்பிரிவில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ரூ.100 (ஒவ்வொரு பிரிவுக்கும்) கூடுதலாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.  


 இந்நிலையில், கலந்தாய்வுக்கு பதிவு செய்ய கடைசி நாளான நேற்று மாலை வரை 1 லட்சத்து 74 ஆயிரத்து 171 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 533 பேர் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.


முன்னதாக, கடந்த ஜூலை 19-ம் தேதி 12-ம் வகுப்பு முடிவுகள் வெளியானது. தமிழ்நாட்டில் பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், ப்ளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது (50:20:30). 12-ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு (Extrapolated to 30 Marks) முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 


இதன் காரணமாக, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், அதிகப்படியான மாணவர்கள் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தியுள்ளனர். எனவே, பொறியியல் கல்லூரி சேர்க்கை கட்-ஆப் மதிப்பெண் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   



      


இணையதள பதிவு முடிவுபெற்ற நிலையில், சமவாய்ப்பு (Random) எண் இன்று வெளியிடப்பட்டது. மாணாக்கர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த சமவாய்ப்பு எண், அவர்களது கைப்பேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பும் இணையதள வழியாக நடைபெறும்.


TNEA இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் அடுத்த மாதம் 4-ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரையிலும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 14-ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 4-ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், வாசிக்க: 


Caste in IIT : ’ஐ.ஐ.டி.க்களில் மெரிட் இல்லை..சாதிதான் இருக்கு!’ - பதவி விலகிய பேராசிரியர் விபின்..!