2025- 26ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கலந்தாய்வின் இரண்டாவது சுற்று நேற்றுடன் முடிந்திருக்கிறது. மொத்தம் 423 கல்லூரிகள் பங்கேற்ற இந்த கலந்தாய்வில்,  மொத்தம் உள்ள 1,73,876 இடங்களில் முதல் சுற்றுக் கலந்தாய்வில் 26,719 இடங்களும் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் 54,552 இடங்களும் நிரம்பி உள்ளன. இதன்மூலம் தற்போது மொத்தம் 81,271 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

Continues below advertisement


இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வு முடிந்த நிலையில், மூன்றாம் கட்டக் கலந்தாய்வுக்கான சாய்ஸ் ஃபில்லிங் நாளை வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், கலந்தாய்வு குறித்த ஓர் அலசலைக் காணலாம்.


இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில், முதல் சுற்றுக் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்கள் உட்பட 98,565 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 994 முதல் சுற்று மாணவர்கள் (இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம்) மற்றும் 53,265 இரண்டாம் சுற்று மாணவர்கள், தங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளைப் பெற்றனர். ஆச்சரியப்படுத்தும் விதமாக, 190 மதிப்பெண்களைப் பெற்ற 166 மாணவர்களும் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளனர். இதன்மூலம் சாய்ஸ் ஃபில்லிங் என்பது மாணவர்களுக்கு இன்னும் முழுமையாக சாத்தியமாகாத ஒன்றாகவே இருக்கிறது என்கிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.


எந்தெந்த துறைகளுக்கு டிமாண்ட்?


முதல் சுற்றுக் கலந்தாய்வைப் போலவே இரண்டாம் சுற்றிலும் அதிகபட்சமாக கணினி அறிவியல் சார்ந்த துறைகளில் அதிகபட்சமாக இடங்கள் நிரம்பி உள்ளன. அடுத்ததாக மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு சார்ந்த துறைகளில் (இசிஇ) அதிக இடங்களும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் சார்ந்த துறைகளில் (இஇஇ) அடுத்தபடியாகவும் இடங்கள் நிரம்பி உள்ளன. குறைந்தபட்சமாக மெக்கானிக்கல் மற்றும் சிவில் சார்ந்த துறைகளில் முறையே 1621 இடங்களும் 735 இடங்களும் மட்டுமே நிரம்பி இருந்தன.


எந்தெந்த துறைகளுக்கு மவுசு குறைவு?



  • உற்பத்தி பொறியியல்

  • ஆட்டோமொபைல் பொறியியல்

  • வானூர்தி பொறியியல்

  • ஜவுளி வேதியியல்

  • சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

  • வேளாண் பொறியியல்

  • தொழில்துறை பொறியியல் மற்றும் மேலாண்மை

  • உள்துறை வடிவமைப்பு

  •  




ஓரிடம் கூட நிரம்பாத 22 கல்லூரிகள்


இந்த கலந்தாய்வில் மொத்தம் 423 பொறியியல் கல்லூரிகள் பங்கேற்ற நிலையில் 22 கல்லூரிகளில் ஓரிடம் கூட இதுவரை நிரம்பவில்லை. 148 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பி உள்ளன.


அதே நேரத்தில் 56 கல்லூரிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இதில் 27 கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகும்.  82 கல்லூரிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக இடங்கள் நிரம்பி உள்ளன. 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களை 147 கல்லூரிகள் பெற்றுள்ளன.


கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுவது என்ன?


அதேபோல 69 கல்லூரிகள் 10 இடங்களுக்கும் குறைவான மாணவர்களையே பெற முடிந்துள்ளது. அரசுக் கல்லூரிகளாகவே இருந்தாலும் தொலைதூரத்தில் இருக்கும் கல்லூரிகளை மாணவர்கள் அதிகம் விரும்பவில்லை. 276 கல்லூரிகளால் தங்களின் மொத்த இடங்களில் 50 சதவீதத்தைக் கூட நிரப்ப முடியவில்லை  என்றும் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.