தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் வளாகக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்தக் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. ஒற்றைச் சாளர முறையில் நடந்து வரும் இந்த கலந்தாய்வு (TNEA Admission) மூலம் இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு மே 6ஆம் தேதி இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 6ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை, 2,06,036 ஆக உள்ளது. இதில் 1,53,904 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி உள்ளனர். 1,15,482 பேர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர்.
விண்ணப்பிக்க இன்னும் 2 வாரங்களுக்கு மேல் அவகாசம் உள்ளதால், விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்ப பதிவு கட்டணம் எவ்வளவு?
OC/ BC/ BCM/ MBC& DNC பிரிவினர்க்கு ரூ.500/- ம், SC/SCA/ST பிரிவினர்க்கு ரூ.250/- ம் ஆகும். இது தவிர, கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான முன் வைப்புத் தொகை / கலந்தாய்வு கட்டணம் எதுவும் இல்லை.
இணையதள வசதி இல்லாத மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்ப பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் சென்ற ஆண்டை போலவே 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
உதவி எண் வெளியீடு
* மாணாக்கர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் சந்கேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அழைப்பு எண் : 1800- 425- 0110.
* மேலும் மாணாக்கர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் அதிகரிக்கும் எண்ணிக்கை
* சென்ற வருடம் (2023) கலந்தாய்வில் பங்கேற்ற கல்லூரியின்எண்ணிக்கை 474, மொத்த இடங்களின் எண்ணிக்கை 2,21,196. மாணக்கர்களின் சேர்க்கை எண்ணிக்கை 1,69,887. இது, இதற்கு முந்தைய ஆண்டை (2022) விட 12.05% சதவீதம் அதிகம் ஆகும்.
* சென்ற வருடம் (2023), அரசுப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணக்கர்களுக்கான மொத்த இடங்கள் 12,136. மாணக்கர்களின் சேர்க்கை எண்ணிக்கை 9,960. இது, இகற்கு முந்தைய ஆண்டை(2022) விட 11.80% சதவீதம் அதிகம் என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
விரிவான அறிவிக்கையைக் காண: https://static.tneaonline.org/docs/Press_News.pdf?t=1716527569767 என்ற இணைப்பைக் காணலாம்.
முழு விவரத்துக்கு: https://www.tneaonline.org/