அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ், பி.பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ், பி.காம். எல்எல்பி ஹானர்ஸ், பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய 4 இளநிலைப் படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.


இவற்றில் 5 ஆண்டு கால சட்டப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கு 2,004 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு கால சட்டப் படிப்புகளுக்கு 624 இடங்கள் உள்ளன.


2023- 24ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 15-ம்தேதி இணையம் மூலம் தொடங்கி,  மே 31ஆம் தேதியோடு முடிவடைந்தது. இதற்கிடையே பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் ரஞ்சித் ஓமன் ஆப்ரஹாம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின்  கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளி ஆகியவற்றில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.


இந்தப் படிப்பில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து வந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. http://tndalu.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.இதற்கு மாணவர்கள் ஜூன் 10ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்’’. 


இவ்வாறு தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர்‌ ரஞ்சித் ஓமன் ஆபிரஹாம் தெரிவித்துள்ளார். 


நுழைவுத் தேர்வு


முன்னதாக இந்திய பார் கவுன்சில் சட்டக் கல்வி விதிகளின்படி, எல்எல்எம் எனப்படும் முதுகலை சட்டப் படிப்புக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு (PGCETL) ஒன்றை நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வை இந்திய பார் கவுன்சில் அறிமுகப்படுத்தும் வரை, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பழைய நடைமுறையே அமலில் இருக்கும். PGCETL தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, அந்தத் தேர்வு முடிவை அடிப்படையாகக் கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.


அதே நிலையில், இந்தியாவில் கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் ஆண்டு மட்டுமே படிக்கும் முதுகலை சட்டப் படிப்பு (எல்எல்எம்) நீக்கப்பட உள்ளது. இளங்கலை சட்டப் படிப்பை முடித்தவர்களுக்காக இந்தப் படிப்பை, யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகப்படுத்தியது. எனினும் இனி வருங்காலத்தில் ஓராண்டுக்கான முதுகலை சட்டப்படிப்பு இருக்காது.


அதற்கு பதிலாக முதுகலை சட்டப் படிப்பு இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட உள்ளது. இதனால் இப்படிப்புகளுக்கு 4 செமஸ்டர்கள் மட்டுமே நடைபெறும்.