அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. மாணவர்கள் இதற்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர்‌ ரஞ்சித் ஓமன் ஆபிரஹாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. Ambedkar Law University) மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் சட்டக் கல்லூரிகளில், ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்பில் (L.L.B) சேரம் விண்ணப்பிக்கலாம். 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 


தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகத்துடன்‌ இணைவுபெற்ற அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும்‌ மற்றும்‌ தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ சீர்மிகு சட்டப் பள்ளியிலும்‌ பயிற்றுவிக்கப்படும்‌ 3 ஆண்டு ஹானர்ஸ் மற்றும் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசித் தேதி ஆகும். பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரப்பூர்வ இணையதளமான tndalu.ac.in என்ற இணைய முகவரி வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், 
பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ்
பிபிஏ எல்எல்பி ஹானர்ஸ்
பி.காம். எல்எல்பி ஹானர்ஸ்
பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ்  உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. 


இதில், 3 ஆண்டு எல்எல்பி ஹானர்ஸ் சட்டப் படிப்பு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திலும் 3 ஆண்டு எல்எல்பி ஹானர்ஸ் சட்டப் படிப்பு அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் சட்டக் கல்லூரிகளிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில், ஹானர்ஸ் படிப்பில் சேரக் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் அவசியம். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு 55 சதவீத மதிப்பெண்கள் போதுமானது. விண்ணப்பிக்க ரூ.1000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 500 ரூபாய் செலுத்தினால் போதும். 


அதேபோல எல்எல்பி படிப்பில் சேரக் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் அவசியம். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு 40 சதவீத மதிப்பெண்கள் போதுமானது. விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 250 ரூபாய் செலுத்தினால் போதும். 




தேர்வு முறை


ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதேநேரம் அரசின் இட ஒதுக்கீட்டு முறை முறையாகப் பின்பற்றப்படும். 


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல்கலைக்கழக வளாகத்துக்கு மாணவர்கள் வர வேண்டிய தேவை இருக்காது. இதனால் மாணவர்கள் 044-24641919, 044-24957414 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


முழுமையான தகவல்களைப் பெற: https://www.tndalu.ac.in/pdf/2023/july/Notification%20for%203%20Year%20Law%20Courses%20-%202023-2024.pdf


கூடுதல் விவரங்களுக்கு: https://www.tndalu.ac.in/