மாதாமாதம் உதவித்தொகை வழங்க வகை செய்யும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாடு முதலமைச்சரின் (TNCMTSE)- 2025-2026 திறனாய்வுத் தேர்வு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு நடத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

"தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு" (TAMILNADU CHIEF MINISTER'S TALENT SEARCH EXAM- TNCMTSE) 2023- 2024ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

Continues below advertisement

இக்கல்வியாண்டில் (2025- 2026) அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு" (TAMILNADU CHIEF MINISTER'S TALENT SEARCH EXAM - TNCMTSE) 31.01.2026 அன்று நடத்தப்படவுள்ளது.

உதவித் தொகை

இத்தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவியர்கள் என மொத்தம் 1000 மாணக்கர்கள் நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000/- (மாதம் ரூ.1000/- வீதம்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

தேர்விற்கான பாடத் திட்டம்

தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் TNCMTSE தேர்வு இரு தாள்களாக நடத்தப்படும்.

தேர்வு நேரம்

இத்தேர்வானது தாள் 1 (கணிதம் 60 வினாக்கள்) காலை மணி 10.00 முதல் 12.00 வரையிலும், தாள் 2 (அறிவியல் மற்றும் சமூக அறிவியல் 60 வினாக்கள்) பிற்பகல் மணி 2.00 முதல் 4.00 மணி வரையிலும் நடத்தப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணாக்கர்கள் 18.12.2025 முதல் 26.12.2025 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ. 50/-ஐ 26.12.2025-க்குள் மாணக்கர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களின் விவரங்களை பள்ளிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணத்தினை ஆன்லைனில் செலுத்துதல் குறித்தான தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in