தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில், புயல் உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு லீவு:
அதேசமயம், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் சதீஸ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் மட்டுமின்றி அங்கன்வாடி மையத்திற்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடு செய்யும் வகையில் நவம்பர் 15ம் தேதி பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மழையின் தாக்கத்தைப் பொறுத்து மற்ற மாவட்டங்களின் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
புயல் இருக்கிறதா?
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது வட தமிழகம் - புதுச்சேரி - தெற்கு ஆந்திரா நோக்கி செல்வதால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், புயல் அபாயமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஆனாலும், தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு தொடர்ந்து மழையின் தாக்கம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர் கண்காணிப்பு:
குறிப்பாக, மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள கடலோர மாவட்டங்களில் அதிகளவு கண்காணப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதுதான் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு, தீபாவளி விடுமுறை விடப்பட்டது. இந்த சூழலில் அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வுகளுக்கு பள்ளிகள் தயாராகி வரும் சூழலில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்து வருவதால் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு அம்சங்களையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் மாணவர்கள் அமராதவாறு இருப்பதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.