அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியாற்ற நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவதற்கான அரசாணை எண் 149, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.
நேரடி நியமனம்
தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறையில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை நாள் 09.02.2024-ன்படி 2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வு வரும் 21.07.2024 அன்று நடத்தப்பட உள்ளது. 1768 பணியிடங்கள் கொண்ட இடைநிலை ஆசிரியர் தேர்வை எழுத 26,510 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
இந்த நிலையில் விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் (https://www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள்அவர்களது யூசர் எண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
முன்னதாகவே ஹால் டிக்கெட்டைப் பெறலாம்
தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in