தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது தெருநாய்கள் கடித்து மனிதர்கள் பாதிப்படையும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.


அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் அச்சம்புதூர் 12வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் மனிஷா என்ற 8 வயது சிறுமி காலை பள்ளி விடுமுறை காரணமாக தனது வீட்டின் முன் உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மனிஷாவை அங்கு சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சூழ்ந்து கடித்து இழுத்துச் சென்றுள்ளது. இதனை பார்த்த மக்கள் சிறுமியை மீட்டனர்.  மேலும் படுகாயமடைந்த சிறுமியை இரத்த காயங்களுடன் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த நிலையில், மற்றுமொரு சம்பவமாக அதற்கு அருகாமையில் உள்ள வடகரை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட கண்புளி முஸ்தபா தெருவில் இரண்டு சிறுவர்கள் நடந்து செல்லும் போது, அந்த சாலையில் சுற்றித்திரிந்த தெரு நாய் கூட்டங்கள் அந்த இரண்டு சிறுவர்களையும் கடிக்க துரத்தும் காட்சிகளும், நாய்களுக்கு பயந்து அந்த சிறுவர்கள் கீழே விழும் சிசிடிவி காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, அந்த இரண்டு சிறுவர்களை நாய்கள் கடிக்க துறத்தும் போது, அங்கு நின்றிருந்த ஒரு நபர் கற்களை எடுத்து நாய்களை விரட்டவில்லை என்றால் அந்த சிறுவர்களை அந்த நாய்கள் கூட்டம் கடுமையாக கடித்திருக்க கூடும் எனவும், ஆகவே தொடர்ந்து தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் தென்காசி மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி தெருநாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஏற்கனவே கூறும் பொழுது, பல மாதங்களாக அச்சன்புதூரில் நாய்கள் தொல்லைகள் அதிகமாகி கொண்டே வருகிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துகிறது, சிறுவர்களை விரட்டுகிறது, இது அதிகமாக நடந்த வண்ணம் உள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் பேரூராட்சியில் பணி செய்யக் கூடிய பணியாளர்களை நாய் கடித்தது. அது பற்றி அப்போது மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு அனுப்பப்பட்டது அதற்கு நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்  வளர்ப்பு நாய்களை தெருவில் விடாமல் கட்டிப்போட அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள். அதன் பின்பும் தெருநாய்கள் கூட்டமாகத்தான் தெருக்களில் சுற்றித்திரிகின்றன. இனிமேல் குழந்தைகள் தெருக்களில் நடமாட முடியுமா? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். எப்போது இதற்கு தீர்வு கிடைக்கும்? நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டாமல் இனிமேல் யாரேனும் பாதிக்கப்படாமல் இருக்க துரித நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். ஏற்கனவே இரண்டு சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து தற்போதும் சிறுவர்களை நாய்கள் துரத்தும் காட்சிகள் பதிவாகியிருப்பது மக்களிடையே கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.