அரசு சட்டக் கல்லூரிகளில் 132 இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன் படிப்பு) பணி இடங்களுக்காக, தேர்வர்கள் ஜனவரி 31ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை டிஆர்பி நீட்டித்துள்ளது.
இதில், இணைப் பேராசிரியர்- 8 இடங்கள், உதவிப் பேராசிரியர்- 64 இடங்கள், உதவிப் பேராசிரியர் (சட்ட முன் படிப்பு)- 60 என மொத்தம் 132 காலி இடங்கள் உள்ளன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சட்டத்தில் முதுகலைப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களைப் பெறலாம். எஸ்சி, எஸ்டி தேர்வர்கள் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் போதுமானது. எனினும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தனித் தேர்வராகவோ, தொலைதூரக் கல்வி முறையிலோ தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் சட்டக் கல்லூரியில் பணியாற்றி இருக்க வேண்டும்.
மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு அல்லது மாநில ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மார்ச் 15 வரை அவகாசம் நீட்டிப்பு
இந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மார்ச் 3ஆம் தேதியோடு முடிந்த நிலையில், அவகாசம் மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘’உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01, 2025 , நாள். 24.01.2025 வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025-ல் இருந்து, 15.03.2025 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது’’ என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.
சரியான இ- மெயில் முகவரி, மொபைல் எண் ஆகியவை விண்ணப்பிக்க முக்கியம்.
இணைப் பேராசிரியர் பதவிக்கு 2 பாடங்களுக்கு 2 படிவங்களைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.
விரிவான விவரங்களை https://trb.tn.gov.in/admin/pdf/756485331TRB%20-%20Final%20Notification-%2024-1-2025.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து அறியலாம்.