பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர நடத்தப்படும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று இன்று (நவ.19) காலை அறிவிக்கை வெளியான நிலையில், அந்த அறிவிப்பு தற்போது திடீரென நீக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 20.11.2025 முதல் 20.12.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய டிசம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் அவகாசம் அளிக்கப்பட்டது.
ஜனவரியில் ஆசிரியர் தகுதித் தேர்வு
அதேபோல தகுதித் தேர்வு முதல் தாள் ஜனவரி 24ஆம் தேதியும் இரண்டாம் தாள் ஜனவரி 25ஆம் தேதியும் நடைபெற உள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருந்தது.
https://trb.tn.gov.in/admin/pdf/5176563855Teacher%20Eligibility%20Test.pdf என்ற இணைப்பில் அனைத்து விவரங்களும் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் டிஆர்பி கூறி இருந்தது.
இதனால் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த தேர்வர்கள், என்ன செய்வது என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சொல்வது என்ன?
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விசாரித்தபோது, அறிவிக்கையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.