ஆசிரியர் தேர்வு வாரியத்தின் டெட் தேர்வு கேள்வி - பதிலில் 96% தவறு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், ‘’வருங்காலத் தலைமுறையைக் கட்டமைக்கும் பணியில் ஏன் இவ்வளவு அலட்சியம்? ஆசிரியர் தகுதிக்காக லட்சக்கணக்கானோர் டெட் தேர்வை எழுதும் நிலையில், அதன் கேள்விகளில் இத்தனை பிழைகள் இருப்பது, தேர்வு வாரியத்தில் முறையான நிர்வாகமும், அரசின் சரியான கண்காணிப்புகளும் இருக்கிறதா?’’ என்று தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது. 

Continues below advertisement

தேர்வர்கள் ஆட்சேபணை

இதுகுறித்து தவெக மேலும் கூறும்போது, ''ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தாள் 2-இல் 96%-க்கும் மேற்பட்ட கேள்விகள் தவறாக உள்ளதாக தேர்வு எழுதிய மாணவர்கள் ஆட்சேபணை தெரிவித்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

டெட் தேர்வு நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில், தாள் I-இல் உள்ள 150 கேள்விகளில் 59 கேள்விகள் தவறாக உள்ளதாக 5,775 மாணவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அடுத்து, தாள் II-இல் உள்ள 150 கேள்விகளில் 145 கேள்விகளும், அவற்றின் உத்தேச விடைகளும் தவறாக இருக்கின்றன என 35,402 மாணவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆட்சேபனை தெரிவித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

Continues below advertisement

ஏன் இவ்வளவு அலட்சியம்?

வருங்காலத் தலைமுறையைக் கட்டமைக்கும் பணியில் ஏன் இவ்வளவு அலட்சியம்? ஆசிரியர் தகுதிக்காக லட்சக்கணக்கானோர் டெட் தேர்வை எழுதும் நிலையில், அதன் கேள்விகளில் இத்தனை பிழைகள் இருப்பது, தேர்வு வாரியத்தில் முறையான நிர்வாகமும், அரசின் சரியான கண்காணிப்புகளும் இருக்கிறதா? என்று சந்தேகம் எழுப்புகிறது.

இப்போது, இது குறித்து ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகச் சமாளித்து வருகிறது திமுக அரசு. அப்படியெனில், இதுவரை பல்வேறு காரணங்களுக்காகத் தவறுகள் நடந்துள்ளதாகத் தெரியவருகிறது. மாணவர்கள் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் வழிகாட்டிப் புத்தகங்கள் மற்றும் தரமற்ற குறிப்புப் புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு கேள்விகளை குறை கூறியுள்ளதாகத் தேர்வு எழுதிய மாணவர்களையே குற்றம் சுமத்துகிறது அரசு. மாணவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் சரியா? என்று ஆராய்ந்து பதில் சொல்லவேண்டிய தேர்வு வாரியம், தேவையில்லாத விமர்சனங்களை வைக்கக் காரணம் என்ன?

பணி நியமனம் என்ன ஆனது?

ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் குறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்து வருகிறது திமுக அரசு. இப்போது, தேர்வையே வெறும் கடமைக்காக நடத்திவரும் விதமாகச் செயல்படுகிறது.

ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்புக

மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சனைக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். மேலும், நிரப்பப்படாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்'' என்று தவெக தெரிவித்துள்ளது.