ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 150 கேள்விகளில் 145 கேள்விகளும், அவற்றின் உத்தேச விடைகளும் தவறாக இருப்பதாக தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Continues below advertisement

2025ஆம் ஆண்டுக்கான டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்வை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதற்கான உத்தேச விடைக் குறிப்புகள் தொடர்ந்து வெளியாகின.

முதல் தாளிலும் தவறான கேள்விகள்

இதில் ஆட்சேபனை எதுவும் இருந்தால் தெரிவிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. குறிப்பாக, நவம்பர் 25 முதல் டிசம்பர் 3 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதில், முதல் தாளில் உள்ள 150 கேள்விகளில் 59 கேள்விகள் தவறாக உள்ளதாக 5,775 மாணவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

150 கேள்விகளில் 145 கேள்வி - பதில்கள் தவறு?

அதேபோல இரண்டாம் தாளில் உள்ள 150 கேள்விகளில் 145 கேள்விகளும், அவற்றின் உத்தேச விடைகளும் தவறாக இருக்கின்றன என 35,402 மாணவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆட்சேபனை தெரிவித்தவர்களின் எண்ணிக்கை இந்த முறை கணிசமாக அதிகரித்து உள்ளது.

இந்தத் தகவல் தேர்வர்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்திடம் விசாரித்தோம். அவர்கள் கூறும்போது, ’’கடந்த காலங்களைக் காட்டிலும் இந்த முறை அதிக அளவிலான மாணவர்கள், உத்தேச விடைக் குறிப்புகளை ஆட்சேபனை செய்திருப்பது உண்மைதான். ஆனால், வெகு சில கேள்விக்கான விடைக் குறிப்புகள் மட்டுமே தவறுதலாக இருக்கலாம்.

தேர்வு வாரியம் விளக்கம்

ஆனால் தேர்வர்கள், சில வழிகாட்டி கைடு புத்தகங்களையும் டிஆர்பி கூறும் தரம் இல்லாத நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு, விடைகளை ஆட்சேபித்துள்ளனர். இது சரியல்ல. முறையான தரம் கொண்ட நூல்களை மட்டுமே ஆதாரமாக வைக்க முடியும். இந்த முறை மிகவும் கவனமாக தேர்வு செய்யப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கான தரத்துடன் விடைகள் வெளியிடப்பட்டுள்ளன’’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

எனினும் இதுகுறித்து முறையான வெளிப்படையான அறிவிப்பை, டிஆர்பி வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.         

இந்த ஆண்டு கேள்விகள் எளிதாக இருந்ததாகவும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்றுமே தேர்வர்கள் தரப்பில் ஆரம்பத்தில் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.