ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்றே கடைசி நாள் என்ற சூழலில், விண்ணப்பிக்கத் தேவையான இணையதள முகவரி முடங்கி உள்ளதால், தேர்வர்கள் அவதியிலும் தவிப்பிலும்உள்ளனர்.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் அனைத்திலும் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம். தேசிய அளவில், தேசிய தகுதித் தேர்வும் மாநிலங்களுக்கு, மாநில தகுதித் தேர்வும் நடத்தப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?
அந்த வகையில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் நாள் முதல் தாளுக்கான தேர்வும் அடுத்த நாள், இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடைபெறுகிறது. எனினும் இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இரண்டு தேர்வுக்கும் தனித்தனியாகத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
முதல் தாள் தேர்வு, இடைநிலை ஆசிரியர் பணிக்கும் இரண்டாம் நாள் தேர்வு பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் நடத்தப்படுகிறது. ஒருவர் இரு தாள்களுக்கும் தேர்வு எழுதலாம்.
விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்றே கடைசி நாள் என்ற சூழலில், விண்ணப்பிக்கத் தேவையான இணையதள முகவரி முடங்கி உள்ளதால், தேர்வர்கள் அவதியில் உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, ’’இன்று TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால், அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், பிற்பகல் முதல் இணைய தளம் முடங்கியுள்ளது.
கால அளவை நீட்டிக்கக் கோரிக்கை
இன்னும் கூடுதலாக ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடிய சூழல் உள்ளதால் விண்ணப்பிப்பதற்கான கால அளவை நீட்டித்து தர தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்வர்கள், https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6InZ2M3F4WGo1UXpyWkhxU3NZMkJtVUE9PSIsInZhbHVlIjoiT1lRb281WWNMMTlGWDIxSkNNcHZvZz09IiwibWFjIjoiMDMyMDEwMDQ1YjdiMmMyZTY4NmExM2Y0MjNlMDk3NmJjNjBjZmMxZjAzZWQ5MDZiYmNkN2FlYzI2MTZhOWI0YSIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் உள்ள நிலையில், இந்த இணையதள முகவரி முடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி: https://www.trb.tn.gov.in/