10ஆம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வை எழுத 16,550 மாணவர்கள் வரவில்லை என்றும் 4 தனித் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டு பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22-ம் தேதி நிறைவடைந்தது. அதேபோல 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 4-ல் தொடங்கிய நிலையில், நேற்றுடன் (மார்ச் 25ஆம் தேதி) நிறைவடைந்தது.


10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு கடந்த 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெறுகிறது. பொதுத் தேர்வின்போது மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க அறை கண்காணிப்பாளர்கள் 48,700 பேர் ஈடுபட்டுள்ளனர். 4,591 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை மின்சாரம், கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஆசிரியர்களுக்குத் தடை


தேர்வறைக்குள் செல்போன் உள்பட மின்சாதன பொருட்கள் கொண்டுவர ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


முதல்நாளாக மார்ச் 26ஆம் தேதி தமிழ் பாடத்துக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இரண்டாவதாக நேற்று (மார்ச் 28) ஆங்கிலப் பாடத்துக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது.


9.21 லட்சம் பேர் விண்ணப்பம்


பொதுத் தேர்வை எழுத பள்ளி மாணவர்கள், 9 லட்சத்துக்கு 10 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுடன் தனித் தேர்வர்கள் 11,403 பேரும் விண்ணப்பித்தனர். ஆக மொத்தம் 9 லட்சத்து 21 ஆயிரத்து 578 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.


இதில் 16,550 மாணவர்கள் நேற்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வை எழுதவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 433 பேரும் தனித் தேர்வர்கள் 1,117 பேரும் தேர்வுக்கு ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.


முறைகேட்டில் ஈடுபட்டோர்கள் யார் யார்?


அதேபோல கள்ளக்குறிச்சி தேர்வு மையத்தைச் சேர்ந்த 4 தனித் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.


மே 10ஆம் தேதி தேர்வு முடிவுகள் 


10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 12 முதல் 22-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.