செட் எனப்படும் மாநில தகுதித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எப்போது வெளியிடப்படும் என்று தேர்வர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு மத்திய அரசு, நெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வையும், மாநில அரசு செட் எனப்படும் மாநில தகுதித் தேர்வையும் நடத்தி வருகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை கூட நடத்தப்படவில்லை
மத்திய அரசு சார்பில் நடைபெறும் நெட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை யுஜிசி நடத்துகிறது. எனினும் செட் தேர்வு அவ்வாறு நடத்தப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை கூட முறையாக நடத்தப்படவில்லை என்று தேர்வர்கள் குமுறுகின்றனர்.
மார்ச் மாதத்தில் தேர்வு
முன்னதாக மாநிலத் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு 2024ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பலகட்ட தாமதத்துக்குப் பிறகு, சுமார் 1 ஆண்டு கழித்து 2025ஆம் ஆண்டு மார்ச் 6 முதல் 9ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது.
தொடர்ந்து தேர்வு பற்றி ஏற்கெனவே வெளியிட்ட விடைக் குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், திரும்பப் பெற்றது தேர்வர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
3 மாதங்கள் ஆகியும் வெளியாகாத தேர்வு முடிவுகள்
பிறகு தற்காலிக விடைக் குறிப்பு மார்ச் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. எனினும் 3 மாதங்கள் ஆகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. தகுதித் தேர்வு முடித்து நியமனத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் தேர்வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
என்ன காரணம்?
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கேட்டபோது, செட் தேர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், தேர்வு முடிவுகளை வெளியிட முடியவில்லை. இந்த வழக்கு தற்போது, முடியும் தருவாயில் உள்ளது. வந்ததும் செட் தகுதித் தேர்வு முடிவு வெளியிடப்படும். உடனடியாக உடனடியாக உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in/