புதிய கல்வி ஆண்டுக்கான வேலை நாட்கள், பள்ளி விடுமுறை நாட்கள் குறித்த, உத்தேச அட்டவணையை, பள்ளிக் கல்வி இயக்குனரகம் அண்மையில் வெளியிட்டது. கடந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு 217 வேலை நாட்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மூன்று நாட்கள் அதிகரித்து, 220 நாட்கள் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆண்டு முழுவதும் ஒரு கல்வியாண்டில் பள்ளி செயல்படும் வேலை நாட்கள், தேர்வு தேதிகள், விடுமுறைகள், உயர் கல்வி வழிகாட்டி முகாம் உட்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டியை ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. 2018-ம் ஆண்டு முதல் இந்த நாட்காட்டி வெளியாகி வருகின்றது. இதற்கிடையே புதிய கல்வியாண்டுக்கான (2024-25) நாள்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.


அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


பாடவேளைகளுக்கான நேரத்தைப் பொறுத்தவரை, காலை 9:00 மணிக்கு பள்ளி வேலை நேரம் துவங்க வேண்டும். முதல், 30 நிமிடங்கள் காலை வணக்கக் கூட்டம் நடத்தப்படும். காலை 9:30 முதல், 10:10 மணி வரை முதல் பாட வேளையில், தமிழ் கற்பிக்க வேண்டும். 10ம் வகுப்பு வரை இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு வாரமும் உயர் கல்வி வழிகாட்டி வகுப்புகள், மொழிகள் ஆய்வகம், மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் ஆகியவையும் நடத்தப்பட உள்ளது.


காலாண்டு எப்போது?


 கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகுப்புகளுக்கு ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தொடர்ந்து 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வு செப்டம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும். காலாண்டு விடுமுறை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை கடந்த ஆண்டு, ஏழு நாட்களாக இருந்தது. இந்த ஆண்டு, 4 நாட்கள் என குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.




அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு


அரையாண்டு மற்றும் 2-ம் பருவத்தேர்வு டிசம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்படும். தொடர்ந்து டிசம்பர் 24-ல் தொடங்கி ஜனவரி 1-ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 9 முதல் 17-ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.


பள்ளி வேலை நாள் ஏப்ரல் 27-ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின் கோடை விடுமுறை ஏப்ரல் 28-ம் தேதி முதல் வழங்கப்படும். மொத்த பள்ளி வேலை நாட்கள் 220 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .


10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது?


அரசு வெளியிட்டுள்ள நாட்காட்டியில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, செய்முறைத் தேர்வு தொடர்பான தேதிகள் எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள் தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர்களுக்கு ஆண்டு முழுவதும் வழங்கப்பட உள்ள பயிற்சிகள் உள்ளிட்ட விவரங்களும் நாட்காட்டியில் கூறப்பட்டுள்ளன.