ஆர்டிஇ சட்டத்தின்‌ கீழ்‌ ஜூன் 3ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகளில் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.


2024 - 2025 ஆம்‌ கல்வியாண்டில்‌ ஆர்டிஇ சட்டத்தின்‌ கீழ்‌ 25 % மாணவர்கள்‌ சேர்க்கை விவரம்‌ குறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் கூறி உள்ளதாவது:


’’குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009. சட்டப் பிரிவு 12 (1) (சி) ன்கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்குரிய சேர்க்கை இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டது. 


மே 27 வரை விண்ணப்பம்


2024- 2025ஆம் கல்வியாண்டின் சேர்க்கைக்கு தனியார் பள்ளிகள் இயக்குநரின் 01.04.2024 ஆம் நாளிட்ட கடிதத்தின் அடிப்படையில் 84,765 இடங்களுக்கு 22.04.2024 முதல் 20.05.2024 வரை 174756 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் அமைக்கப்பட்ட கல்வி அதிகாரிகள் கொண்ட குழுவால் 10.05.2024 முதல் 27.05.2024 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள், தகுதியற்ற விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் விடுபட்ட விண்ணப்பங்கள் என பிரிக்கப்பட்டது.


ஆவணங்கள் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க தெரிவித்து விண்ணப்பிக்கப்பட்ட மாணாக்கர்களின் பெற்றோர்களின் கைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் செய்தி அனுப்பப்பட்டு, விடுபட்ட ஆவணங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் 27.05.2024 அன்று தகுதியான விண்ணப்பங்கள் 1,57,767 என உறுதி செய்யப்பட்டன.


பெற்றோர்களுக்கு OTP எண்


இதனை அடுத்து 28.05.2024 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட 1,57,767 தகுதியான விண்ணப்பங்கள் பள்ளிகளில் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 25% ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக இருக்கும் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாணாக்கர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட விவரம் பெற்றோர்களுக்கு OTP எண் அனுப்பப்பட்டு சேர்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணாக்கர்களின் விவரம் அந்தந்த பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், OTP எண் பெற்ற மாணாக்கர்களின் பெற்றோர்கள் உடனடியாக ஜூன் 3-க்குள் சார்ந்த பள்ளிகளுக்கு சென்று பள்ளி முதல்வரிடம் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்’’.


இவ்வாறு தனியார்‌ பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.