தடுப்பூசி போடாத கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என உயர்கல்வித்துறை இயக்குநரகம அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையில் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி  தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள் அனைத்தும் வருகின்ற 1 செப்டம்பர் முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன. இதுகுறித்து கல்லூரிகளுக்கு உயர்கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் அனைத்து மாணவர்கள் பேராசிரியர்கள் பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், தடுப்பூசி போடாத பேராசிரியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். கல்லூரிகளில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கல்லூரிக்கு வரவேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.





மேலும் சில நெறிமுறைகள்:


நோய்த்தொற்று உள்ள மாணவர்களைக் கண்டறிந்தால், அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் RT-PCR சோதனை எடுக்க வேண்டும்


கல்லூரி வளாகத்தினுள் பயன்படாத பிளாஸ்டிக் கப்புகள், தேநீர் கப்புகள், டயர்கள், விஷ ஜந்துக்கள் தஞ்சமடையும் இடங்களை உடன் அப்புறப்படுத்த வேண்டும்.


நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழிகளில் கண்காணிப்பு குழு அமைத்து SOP முறை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்


சுத்தமான குடிநீர் வசதியினை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்.


கல்லூரி துவங்குவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே கல்லூரி வளாகத்தினை சுத்தம் செய்திட முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெற வேண்டும். அரசு அளிக்கும் இந்தத் தளர்வுகளை பொதுமக்கள் முழுப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி, எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு ஏற்கெனவே பொதுவான நெறிமுறைகளை குறிப்பிட்டுள்ளது