அரசுப் பள்ளிகளில் 2025- 26ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 20 நாட்களில் 1 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 268 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் உள்ள 58 மாவட்டங்களில் 10 ஆயிரம் பேருக்கும் அதிகமான மாணவர்களைச் சேர்த்து, சிவகங்கை முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் வெறும் 29 பேரை மட்டும் சேர்த்து தேனி கடைசி இடத்தில் உள்ளது.


தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி, முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு கல்வி ஆண்டும் ஜூன் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு மே மாதம் வரை செயல்படும். மே மாதத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கும். எனினும் கடந்த சில ஆண்டுகளாக முன்கூட்டியே மாணவர் சேர்க்கை தொடங்கி விடுகிறது.


என்னென்ன வசதிகள்?


அரசுப் பள்ளிகளில் சேரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இலவச நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணி, உணவு, எழுதுபொருட்கள் என அனைத்துமே இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. உண்ண உணவு, உடுத்த உடை ஆகியவற்றுடன் தொழில் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு, பல்வேறு விதமான உதவித் தொகைகள், கல்லூரிகளில் உயர் கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.


57 வகையான திட்டங்கள்


இத்துடன் நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், கலைத் திருவிழா, நம் பள்ளி நம் பெருமை, மாணவர் மனசு, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி, வானவில் மன்றம், அனைவருக்கும் ஐஐடிஎம், மணற்கேணி, தமிழ்க் கூடல், திறனறித் தேர்வுகள், விழுதுகள் உள்ளிட்ட 57 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 


தற்போது தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களையும் உதவித் தொகைகளையும் எடுத்துக்கூறி மாநிலம் முழுவதும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர்க்கை தொடங்கிய 20 நாட்களில், 38 மாவட்டங்களிலும், 1 லட்சத்தைத் தாண்டி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.


எந்த மாவட்டத்தில் அதிகம்? எங்கு குறைவு?


அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்களின் சேர்க்கை 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. 10,316 மாணவர்கள் இங்கு அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அடுத்தபடியாக திருச்சி மாவட்டத்தில் மாணவர்கள், 3668 பேர் வெவ்வேறு அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் 3090 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதே நேரத்தில் தேனி மாவட்டத்தில் இரட்டை இலக்கத்திலேயே மாணவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.


ஜூன் மாதத்தில் மாணவர்கள் சேர்க்கை முடியும்போது, இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.