London Heathrow Airport Shut Down: லண்டன் விமான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், 1,350 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
லண்டன் விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து:
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் அருகே உள்ள, மின்சார துணை மின்நிலையத்தில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து நேர்ந்துள்ளது. இதனால் மின்சாரம் விநியோகம் தடைப்பட்டு, விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை விமான நிலையத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மின்சார துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தால், மேற்கு லண்டனில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
துணை மின்நிலையத்திற்குள் இருந்த ஒரு மின்மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டதகா தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹேய்ஸில் உள்ள நெஸ்டல்ஸ் அவென்யூவில் நடந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 150 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து தற்போது வரை தகவல் ஏதும் இல்லை.
விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு:
விமான நிலைய நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஹீத்ரோ விமான நிலையம் குறிப்பிடத்தக்க மின் தடையை சந்தித்து வருகிறது. பயணிகள் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பைப் பராமரிக்க, மார்ச் 21 அன்று நள்ளிரவு வரை விமனா நிலையம் மூடப்படும். பயணிகள் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,350 விமான சேவை பாதிப்பு
விமான சேவை கண்காணிப்பு அமைப்பான FlightRadar24 வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மார்ச் 21 அன்று ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து 1,351 விமானங்கள் இயக்கப்பட இருந்தன. அவை அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பா முழுவதும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கையாளும் யூரோகண்ட்ரோல், அதன் வலைத்தளத்தில், ஹீத்ரோ விமான நிலையத்திற்கு எந்த விமானங்களும் வர அனுமதிக்கப்படவில்லை என்றும், வரும் அனைத்து விமானங்களுக்கும் மாற்றுத் திட்டங்கள் நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சாதனை படைத்த விமான நிலையம்:
விமான நிலையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த ஆண்டு அதன் முனையங்கள் வழியாக 83.9 மில்லியன் பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில், கடந்த ஆண்டு துபாய்க்கு அடுத்தபடியாக இரண்டாவது பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக ஹீத்ரோ இருந்தது என்று பயண தரவு நிறுவனமான OAG தெரிவித்துள்ளது.