குடியரசு முன்னாள் தலைவரும் ஆகச் சிறந்த ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆசிரியர் தினம் இன்று (செப்.5) கொண்டாடப்படுகிறது.


இதற்கிடையே தன்னிகரற்ற வகையில், தனித்துவமாகச் செயல்பட்டும் வரும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்தப் பெயர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று மாற்றப்பட்டது. சென்னை வண்டலூரில் ஆசிரியர் தின நிகழ்வும் விருது விழாவும் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு, விருதுகளை வழங்கி வருகிறார்.  


பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


375 விருதுகள்


தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்கம சார்பில், சிறந்த பள்ளிகள், ஆசிரியர்கள் என இரு பிரிவுகளில் மொத்தம் 375 விருதுகள் வழங்கப்படுகின்றன.


நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ’’தமிழகத்தில் உள்ள கல்வி முறையை சிலர் குறை சொல்வதை என்னால் ஏற்க முடியாது. நாட்டிலேயே தலைசிறந்த கல்விமுறை தமிழ்நாட்டு கல்வி முறை. நம் கல்வி முறைதான் மாணவர்களைச் சிந்திக்க வைக்கிறது.


ஆசிரியர்களே மன்னிக்க மாட்டார்கள்


தமிழ்நாட்டின் கல்வி முறையைக் குறை சொல்பவர்களை ஆசிரியர்களே மன்னிக்க மாட்டார்கள். முன்னணி மருத்துவர்கள் விஞ்ஞானிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அரசுப் பள்ளிகளில் படித்த பலர் இஸ்ரோ விஞ்ஞானிகளாகப் பணியாற்றி இருக்கிறார்கள்.


முதல்வர் ஆசிரியரைப் போல மாணவர்களுக்கு ஒவ்வொரு திட்டமாகப் பார்த்து, செயல்படுத்தி வருகிறார்’’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு பதிலடியாக அமைச்சர் உதயநிதி அவ்வாறு கூறினார். 


தொடர்ந்து ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்பதையும் உதயநிதி ஸ்டாலின் சூசகமாகத் தெரிவித்தார்.