தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெரும் ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 171 பள்ளிக் கல்வி இயக்ககத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் சேலம் அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கணினி அறிவியல் பாடத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழக அரசு இவருக்கு நல்லாசிரியர் விருது அறிவித்துள்ளது.
18 ஆண்டுகளாக மாணவர்கள் 100% தேர்ச்சி
குறிப்பாக செந்தில்குமார் 1992 முதல் 1999 வரை அம்மாபேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர். இவர் தனது பணியை வலசையூர் அரசு பள்ளியில் தொடங்கியுள்ளார். பின்னர் 2017 ஆம் ஆண்டு அம்மாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார். இவர் கடந்த 18 ஆண்டுகளாக கணினி அறிவியலில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களை 100% தேர்ச்சி பெற செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த செந்தில் குமார் கூறுகையில், "மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் படித்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும்போது நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது பெருமையாக உள்ளது. எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களிடையே வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக எனது வீட்டில் நூலகம் ஒன்றை அமைத்து வைத்துள்ளேன். எனது மாணவர்கள் அனைவரும் கட்டாயம் புத்தகம் படிக்க வேண்டும். பிற்காலத்தில் அவர்கள் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். மேலும் தாய் ,தந்தையை இழந்த மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்து அவர்களின் படிப்பிற்கு உதவி வருகிறேன்.
நான் பணிபுரிய தொடங்கிய 20 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக 100% எனது மாணவர்களை கணினி அறிவியல் பாடத்தில் பொதுத் தேர்வு தேர்ச்சி பெற செய்துள்ளேன். அதற்கு கிடைத்த பரிசாக இந்த நல்லாசிரியர் விருதை பார்க்கிறேன். இந்த நல்லாசிரியர் விருது எனக்கு மேலும் சிறப்பாக பணி புரிய ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இதற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
இதேபோன்று சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர், மாதநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் அன்பரசி, தலைவாசல் சாத்தப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ஆதித்தன், கொட்டவாடி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாவதி, பேளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணிதம் ஆசிரியர் மீனா, தேவியாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் கணிதம் ஆசிரியர் புவனேஸ்வரன் ஆகியோருக்கு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது நாளை நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
இதேபோல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் 5 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.