தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வெழுதும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. 



இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து (தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து) தேர்வுக் கட்டணத் தொகையினை பெற்று, அத்தொகையினை ஆன்லைன் வழியாக பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி 05.01.2022 பிற்பகல் 2.00 மணி பிற்பகல் 2.00 மணி முதல் 20.01.2022 வரையிலான நாட்களுக்குள் செலுத்திட, தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வெழுதும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


அதேபோல கண்பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் ஆகிய மூன்று வகை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் SC, SCA, SS, ST, MBC/DC இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் (தமிழ் வழி தவிர) இதர பயிற்று மொழிகளில் பயில்பவராக இருந்தாலும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது என்றும் அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. 


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் BC, BCM இனத்தில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 1/2 இலட்சத்திற்கு (ரூபாய்.2,50,000) குறைவாக உள்ளவர்கள் (எந்த மொழி வாயிலாகப் பயின்றாலும்) தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.


• அரசு உதவி பெறும் / பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பாடத்தொகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தேர்வுக் கட்டண விலக்கு பொருந்தாது. 





அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் கட்டணம் 


2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வின் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ஆன்லைன் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்காக, அனைத்துப் பள்ளிகளும் (எந்த ஒரு பள்ளியும் விலக்கு இல்லாமல்) ரூ.300/- செலுத்த வேண்டும். 


ஆன்லைன் மூலமாக கட்டணங்கள் செலுத்துவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரைத் தொடர்புகொள்ளலாம்.


மேற்படி, தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களையும், 2021-2022-ஆம் கல்வியாண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான தேர்வுக் கட்டணம், அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் ஆகியவற்றினை ஆன்லைன் மூலமாகச் செலுத்திட அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


இவ்வாறு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.