அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர்கள் சேர்க்கை முதலான விவரங்கள் அனைத்தையும் வழங்கும் உதவி மையம் அமைக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அனைத்து விவரங்களையும்‌ நன்கு அறிந்த, அனுபவம்‌ வாய்ந்த பணியாளர்களைக்‌ கொண்டு இந்த மையம் அமைக்கப்பட்டு உள்ளது.


படித்தவர்களாகவே இருந்தாலும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை, படிப்புகள் குறித்த விவரங்கள் பெற்றோர்களுக்கு அதிகமாய்த் தெரிவதில்லை. இதில் படிக்காத பெற்றோர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. இந்த சூழலை சரிசெய்யும் வகையில், இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.


இதுகுறித்துத் தமிழக அரசு தெரிவித்து உள்ளதாவது:


’’தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌‌ அறிவுரையின்படி அனைத்துக்‌ கல்வி நிறுவனங்களிலும்‌ மாணவ, மாணவியர்‌ - பெற்றோர்‌ - பொது மக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ பட்டப்‌ படிப்புகள்‌ - ஆராய்ச்சிப்‌ படிப்புகள்‌ – மாணவர்கள் சேர்க்கை முதலான விவரங்கள்‌ அனைத்தையும்‌ வழங்கும்‌ உதவி மையம்‌ (Help Desk) அமைக்கப்படும்‌ என்று உயர் கல்வித்‌ துறை அமைச்சர்‌ முனைவர்‌ கோவி.செழியன்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


முதலமைச்சர்‌ ஸ்டாலினின்‌ அறிவுரையின்படி உயர் கல்வி பயிலும்‌ மாணவ, மாணவியர்‌, பெற்றோர்‌, பொதுமக்கள்‌ ஆகியோருக்குத்‌ தேவைப்படும்‌ தகவல்களை வழங்கும்‌ உதவி மையம்‌ அனைத்துக்‌ கல்வி நிறுவனங்களிலும்‌ அமைக்கப்பட உள்ளது.


எத்தனை கல்லூரிகள்?


தமிழ்நாட்டில்‌ உயர் கல்வித்‌ துறையின்கீழ்‌ 13 பல்கலைக்கழகங்கள்‌, 164 அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகள்‌, 7 கல்வியியல்‌ கல்லூரிகள்‌, 10 பொறியியல்‌ கல்லூரிகள்‌, 52 தொழில்நுட்பக்‌ கல்லூரிகள்‌/ சிறப்பு நிறுவனங்கள்‌, 162 அரசு உதவி பெறும்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகள்‌ ஆகியவை செயல்பட்டு வருகின்றன.


இக்கல்வி நிறுவனங்களில்‌ மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக் கூடிய மற்றும்‌ அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும்‌ விதமாக, அனைத்துக்‌ கல்வி நிறுவனங்களிலும்‌ மாணவர்‌ சேர்க்கைக்காகவும்‌ மற்றும்‌ இதர காரணங்களுக்காகவும்‌ மேற்குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும்‌ மாணவ மாணவியர்‌, பெற்றோர்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ ஆகியோருக்கு அந்நிறுவனங்களில்‌ வழங்கப்படும்‌ பட்டப் படிப்புகள்‌, பட்ட மேற்படிப்புகள்‌, ஆராய்ச்சிப் படிப்புகள்‌, மாணவர்‌ சேர்க்கை பற்றிய விவரங்கள்‌, துறை அலுவலகங்களின்‌ அமைவிடம்‌, தனியர்களின்‌ கோரிக்கை தொடர்பாக எந்த அலுவலரை அணுகுவது? அலுவலக நடைமுறைகள்‌, தனியர்களின்‌ கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம்‌ போன்ற விவரங்களை ஒரே இடத்தில்‌ தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். 


அனுபவம்‌ வாய்ந்த பணியாளர்களைக்‌ கொண்ட ஓர்‌ உதவி மையம்‌


மேற்குறிப்பிட்டுள்ள உயர் கல்வித்‌ துறையின்கீழ்‌ இயங்கும்‌ அனைத்துக்‌ கல்வி நிறுவனங்களிலும்‌ அக்கல்வி நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ அனைத்து விவரங்களையும்‌ நன்கு அறிந்த, அனுபவம்‌ வாய்ந்த பணியாளர்களைக்‌ கொண்ட ஓர்‌ உதவி மையம்‌ கல்லூரியின்‌ முதன்மையான இடத்தில்‌ ஏற்படுத்தப்படும்‌. இந்த மையம்‌ பயனாளிகளுக்கு எளிதில்‌ உதவும்‌ வகையில்‌ அமைக்கப்படும்‌’’ என உயர் கல்வித்‌ துறை அமைச்சர்‌ கோவி. செழியன்‌‌ அறிவித்துள்ளார்‌.