அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தது என்று புள்ளிவிவரங்களைப் பார்த்து பேச வேண்டுமே தவிர, அரசியலுக்காகப் பேசக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

அமைச்சர் இன்று சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசியல் சட்டத்தின் 8ஆவது அட்டவணையின்படி 22 அலுவல் மொழிகளைப் பயன்படுத்துவதில் தவறே கிடையாது. எந்த ஒரு மொழியையும் கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றால் கூட, குறிப்பிட்ட மொழியில் தேர்ச்சி பெற்றால்தான் தேர்ச்சி என்று கட்டாயப்படுத்துவதை ஏற்க மாட்டேன்.

Continues below advertisement

எந்த விதத்தில் நியாயம்?

இரு மொழிக் கொள்கையில் படித்தவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறார்கள். மொழிக் கொள்கையில் இந்தி, சமஸ்கிருதம் ஏற்று இருப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. மும்மொழிக் கொள்கையை ஏற்கச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? பிடிவாதமாக இருக்கிறார்கள், அது வருத்தமாக உள்ளது.

மாணவர்கள் நலன் சார்ந்து நீங்கள் (மத்திய அரசு) அரசியல் செய்ய வேண்டாம். ஏன் கடந்த 2 ஆண்டுகளாக நிதி அனுப்பாமல், முரண்டு பிடிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறைவா?

மார்ச் 1ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைத்ததில் இருந்து, 4,03,079 குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தது என்று புள்ளிவிவரங்களைப் பார்த்து பேச வேண்டுமே தவிர, அரசியலுக்காகப் பேசக்கூடாது.

ஆசிரியர்கள் நியமனம்

இதுநாள் வரை அரசுப் பள்ளிகளில் பல்வேறு வகையான ஆசிரியர்கள் சுமார் 8, 358 பேரைப் பணியில் சேர்த்துள்ளோம். இந்த ஆண்டு 3,227 பேரை எடுக்க உள்ளோம். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ஆசிரியர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும். 

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.