புதுச்சேரி: தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆன்லைனில் பட்டாசு விற்பனைகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் ஆன்லைன் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் நம்பிக்கையா என உறுதி செய்த பின்னர் அதில் வாங்குவது சிறந்தது என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement

போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் 

தீபாவளி நெருங்கி வரும் இந்த நாட்களில், இணையத்தின் வழியாக பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. அதே சமயம், இதனை துஷ்பிரயோகம் செய்து, போலியான வலைதளங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் மோசடிகள் நடைபெறுவது கவலைக்குரிய நிலையாக மாறியுள்ளது. குறிப்பாக, தீபாவளியை முன்னிட்டு குறைந்த விலையில் பட்டாசுகள் கிடைக்கும் என்று சொல்லி ஏராளமான பொதுமக்கள் ஏமாறி பணத்தை இழந்து வருகின்றனர்.  

ஆன்லைன் வாங்குதலில் அதிகரிக்கும் நம்பிக்கை  

கடந்த சில ஆண்டுகளில், மக்கள் வீட்டு வாசலிலிருந்தே பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதியினால் ஆன்லைன் வணிகத்திற்கு பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் எனக் கூறி விளம்பரங்கள் வருவதால், பலரும் உடனடியாக ஆர்டர்கள் செய்து விடுகின்றனர். ஆனால் அந்த விளம்பரங்களில் மறைந்திருக்கும் மோசடிகளை கவனிக்காமல் விட்டுவிடுவது, பலருக்கும் பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது.  

Continues below advertisement

போலியான பட்டாசு வலைதளங்கள்  

பட்டாசு விற்பனையாளர்களின் பெயரில் போலியான இணைய தளங்கள் உருவாக்கப்பட்டு, குறைந்த விலைக்கு நேரடி டெலிவரி செய்வோம் என்கிற பெயரில் பணத்தை வசூலிக்கின்றனர். உண்மையில் எந்தப் பொருளும் வழங்கப்படாமல் மக்கள் பணத்தை இழந்து வருகிறார்கள். புதுச்சேரி இணைய காவல் நிலையத்தில் இத்தகைய புகார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

கடந்த ஆண்டு மட்டும் புதுச்சேரியில் 117க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகி, பல லட்ச ரூபாய்கள் பொதுமக்களிடமிருந்து மோசடியாக பெற்றுக்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு போலியான ஆன்லைன் பட்டாசு விளம்பரங்களுக்கு பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.  

போலீசாரின் எச்சரிக்கை மற்றும் அறிவுரை 

புதுச்சேரி இணைய வழி போலீசார், “இணையத்தில் ஏதேனும் பொருளை வாங்கும் முன்பும் அதன் உண்மைத்தன்மையை நன்கு ஆராய்ந்து, விற்பவரின் முழுமையான விபரங்களையும் சரிபார்த்து பார்த்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் தோன்றும் கவர்ச்சியான விளம்பரங்களை உடனடியாக நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

மோசடிக்கு ஆளானவர்கள் உடனடியாக புகார் அளித்தால், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி எளிதாகும் என்பதால், எந்த குற்றச்சம்பவத்தையும் மறைக்காமல் உடனடியாக தகவல் தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  

எங்கே, எப்படி புகார் அளிப்பது?

இணைய குற்றச்செயல்களுக்கு உள்ளானால் அல்லது சந்தேகத்துக்கிடமான எந்த தகவலையாவது காணும்போது, பொதுமக்கள் பின்வரும் வழிகளைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம்:  

  • தேசிய அளவிலான இலவச உதவி எண்: 1930
  • புதுச்சேரி சைபர் செல் எண்கள்: 0413-2276144 / 9489205246
  •  மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in
  • இணைய தளம்: www.cybercrime.gov.in 

விழிப்புணர்வே பாதுகாப்பு

ஆன்லைன் உலகில் அதிகரித்து வரும் போலி விளம்பரங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் தங்களுக்குள் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது தான் மிகச் சிறந்த பாதுகாப்பு. குறிப்பாக பண்டிகை நாட்களில் வரும் சலுகை விளம்பரங்களைப் பார்த்து உடனடியாக நம்பாமல் சற்று ஆராய்ச்சி செய்தால், பெரும் இழப்புகளை தவிர்க்கலாம்.  

புதுச்சேரி இணைய காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை, தீபாவளி கொண்டாட்டத்தை பாதிக்காமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க உதவிடும் முக்கியமான அறிவுரை எனலாம்.