ஒரு மாணவனின்‌ ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு அம்மாணவனின்‌வகுப்பறை கற்றல்‌ அனுபவங்களும்‌, கல்வி இணைச்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌கல்வி சாரா செயல்பாடுகளில்‌ அம்மாணவர்களின்‌ சிறப்பான பங்களிப்பும்‌ காரணமாக அமைகின்றது.


பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ 2024-2025 ஆம்‌ நிதியாண்டிற்கான மானியக்‌ கோரிக்கையின்‌போது அரசுப் பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ ஆளுமைத்‌ திறன்‌ மேம்பாட்டுச் செயல்பாடுகள்‌ வளர்க்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அதில், "அனைத்துப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களிடையே தலைமைப்‌ பண்பை வளர்க்கும்‌ வகையில்‌, குறிஞ்சி, முல்லை, மருதம்‌, நெய்தல்‌, பாலை என்னும்‌ பெயர்களில்‌ மாணவர்‌ குழுக்கள்‌ அமைத்து, மாணவத்‌ தலைவர்‌ மற்றும்‌ மாணவ அமைச்சர்கள்‌ தெரிவு செய்யப்படுவர்‌. இதன்‌ மூலம்‌ மாணவர்களிடையே அரசியல் அறிவுசார்ந்த அனுபவங்கள்‌ மற்றும்‌ ஆளுமைத்‌ திறன்‌ மேம்பட, மாதிரி சட்டமன்றம்‌ மற்றும்‌ மாதிரி பாராளுமன்றம்‌ நடத்தப்படும்‌. இதற்காக, தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு பயிற்சிகள்‌ வழங்கப்படும்‌. இத்திட்டம்‌ ரூபாய்‌.2 கோடி மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌" என்று கூறப்பட்டிருந்தது.


இதன்படி, 2024 -25 ஆம்‌ ஆண்டில்‌ தமிழகத்தில்‌ உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும்‌ மாணவர்‌ குழு (House System) அமைப்பினை "மகிழ்‌ முற்றம்‌" என்ற பெயரில்‌ நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


குழுவாக இணைந்து செயல்படுதல்‌, சமூக மனப்பான்மை, வேற்றுமைகள்‌இல்லாத பரஸ்பர ஆதரவு ஆகியவைதான்‌ மாணவர்‌ குழு (House System) அமைப்பின்‌ முதன்மை நோக்கமாகும்‌. விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அப்பால்‌, சமூக உணர்வை ஊக்குவிப்பதற்கும்‌, குழுப்‌ பணியை வளர்ப்பதற்கும்‌, பல்வேறு கல்வி மற்றும்‌ கல்விச்சாரா இணைச்‌ செயல்பாடுகள்‌ மூலம்‌ மாணவர் தலைமையை ஊக்குவிப்பதற்கும்‌ ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, இந்த அமைப்பு மாணவர்களின்‌ தலைமைத்துவம்‌, பங்கேற்பு மற்றும்‌ ஆரோக்கியமான போட்டிகளுடன்‌ மாணவர்களின்‌ தனிப்பட்ட வளர்ச்சியையும்‌ குழு செயல்பாடுகளில்‌ ஈடுபடவும்‌ ஊக்குவித்து மகிழ்ச்சியான பள்ளிச்‌ சூழலை உருவாக்குகிறது.


மாணவர்‌ குழு அமைப்பின்‌ நோக்கங்கள்‌


* கற்றல்‌ திறன்‌ மேம்பாடு


* மாணவர்களின்‌ ஊக்கம்‌ மற்றும்‌ பங்களிப்பை அதிகரித்தல்‌


* மாணவர்கள்‌ விடுப்பு எடுப்பதை குறைத்தல்‌


* ஒற்றுமை மற்றும்‌ அனைவரையும்‌ உள்ளடக்கிய கல்வியை ஊக்குவித்தல்‌


* அனைத்து மாணவர்களுக்குமான வாய்ப்புகள்‌


* நேர்மறை நடத்தைகளை வலுவூட்டுதல்‌


* தலைமைத்துவ பண்பை வளர்த்தல்‌


* ஆசிரியர்‌ மாணவர்‌ உறவை மேம்படுத்துதல்‌


5 குழுக்கள்


இந்தத் திட்டத்தில் பள்ளியில்‌ உள்ள அனைத்து மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ ஐந்து குழுக்களாக பிரிக்கப்படுவார்கள்‌. குறிஞ்சி, முல்லை, மருதல், நெய்தல், பாலை என குழுக்களுக்குப் பெயர் சூட்டப்படும்.


இக்குழு அமைப்பில்‌ 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும்‌ இடம்பெறுவர்‌. ஒவ்வொரு வகுப்பிலும்‌ பயிலும்‌ மாணவர்கள்‌இவ்வைந்து குழுக்களிலும்‌ இடம்‌ பெறும்‌ வகையில்‌ பிரிக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் குழு ஒதுக்கப்படும்.


மாணவர்கள்‌ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குழுவில்‌ 2 ஆண்டுகள்‌ இருப்பார்கள்‌. மாணவர்கள்‌ வேறு பள்ளிக்கு மாறும்‌ போது சம்பந்தப்பட்ட பள்ளியில் அவர்களுக்கான குழு EMIS தளத்தின்‌ வாயிலாக ஒதுக்கப்படும்‌. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை எமிஸ் தளத்தின்‌ வாயிலாக மாணவர்களுக்கு புதிதாக குழுக்கள்‌ ஒதுக்கப்படும்‌.


மகிழ்முற்றம்‌ - மாணவர்‌ குழு அமைப்பின்‌ பள்ளி அளவிலான மாணவர்‌ தலைவர்‌ (House Captain)


ஒவ்வொரு பள்ளியிலும்‌, அப்பள்ளியின்‌ உயர் வகுப்பில்‌ பயிலும் மாணவர்களுள்‌, ஒவ்வொரு மாணவர்‌ குழுவிற்கும்‌ இரண்டு தலைவர்கள்‌ நியமிக்கப்படுதல்‌ வேண்டும்‌.


இம்மாணவர்‌ தலைவர்கள்‌ தேர்வானது குலுக்கல்‌ முறையில்‌ நடைபெறுதல்‌ வேண்டும்‌. முதலில்‌ ஒவ்வொரு குழுவிற்கும்‌ தலைவராக இருக்க விருப்பம்‌ தெரிவிக்கும்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ மாணவிகளின்‌ பெயர்களை துண்டுச்‌ சீட்டுகளாக எழுதி அம்மாணவர்களின்‌ முன்னிலையில்‌ குலுக்கல்‌ முறையில்‌ ஒரு மாணவ குழுத்‌ தலைவரையும்‌, ஒரு மாணவி குழுத்‌ தலைவரையும்‌ தேர்ந்தெடுத்தல்‌ வேண்டும்‌.


இருபாலரும்‌ பயிலும்‌ பள்ளிகளில்‌ ஒவ்வொரு குழுவிற்கும்‌ ஒரு மாணவர்‌ மற்றும்‌ ஒரு மாணவி ஆகிய இருவரும்‌ குழுத்தலைவர்களாக இருப்பர்‌.


ஒரு பாலருக்கான பள்ளிகளில்‌, ஒவ்வொரு குழுவிற்குமான இரண்டு தலைவர்களும்‌, அப்பள்ளியில்‌ பயிலும்‌ பாலினத்தை பொறுத்து அமையப்பெறும்‌ என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.


இதையும் வாசிக்கலாம்: Haryana, J&K Election Result LIVE: ஹரியானாவில் பாஜக 49 தொகுதிகளில் முன்னிலை..