திண்டிவனம் அருகே கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டிட வசதி இல்லாத நிலையில், கோயில் வளாகத்தில் பந்தல் போட்டு கல்வி கற்பிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதற்கு பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கன்னிகாபுரம் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நல்லாமூர், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 57 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்கள் 2 பேர் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் 2 பேர், பள்ளி மேலாண்மைக்குழு சார்பாக நியமிக்கப்பட்ட 2 ஆசிரியர்கள் என மொத்தம் 6 ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர்.


ஆனால் இந்தப் பள்ளிக்கு ஒரே ஒரு கட்டிடம் மட்டும் உள்ளதால், அதில் 1-ம் வகுப்பு முதல் முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர். 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் அருகில் உள்ள வீடுகள் மற்றும் வீட்டின் வளாகங்களில் கல்வி பயிலும் நிலை உள்ளது. மேலும் ஒரே வகுப்பறையில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்துவதால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகின்றது. 


அடிப்படை வசதி கூட இல்லாத அவலம்


மேலும் கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளிக்கூடத்திற்கு என்று தனி சமையல் அறை கிடையாது. இதனால் திறந்த வெளியில், சுகாதாரமற்ற முறையில் சமையல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பள்ளியில் கழிப்பறை, விளையாட்டு மைதானம் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பள்ளி மாணவர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர்.


இதுகுறித்து ’ABP நாடு’ செய்தி வெளியிட்ட நிலையில் திண்டிவனம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, புதிய கட்டிடம் கட்ட திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18 லட்சத்தை ஒதுக்கினார். இருப்பினும் நிதி ஒதுக்கீடு செய்து 6 மாதங்கள் ஆன நிலையில், தற்போது வரை புதிய பள்ளி கட்டிடம் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 




கோயில் வளாகத்தில் கல்வி


இந்த நிலையில் கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள், கோயில் வளாகத்தில் அமர்ந்து படிக்கும் அவல சூழல் நிலவுகிறது. இதுகுறித்துப் பெற்றோர்கள் சிலர் பேசும்போது, ''பள்ளியில் கல்வி கற்பிப்பதற்கு போதுமான அளவிற்கு ஆசிரியர்கள் இருப்பதால், ஆண்டுக்கு, ஆண்டு மாணவ, மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. எனவே விரைவில் தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும்'' என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


மேலும் அரசுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் புறம்போக்கு நிலம் அப்பகுதியில் உள்ளதாகவும், அங்கு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்து வருகிறது.