அதிர்ச்சி ஊட்டும் விதமாக 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே (10 இடங்களுக்கும் குறைவாக) மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 


தமிழ்நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. மூன்று கட்டங்களாக நடைபெற்ற கலந்தாய்வு இன்றுடன் (செப்டம்பர் 3) முடிவடைந்துள்ளது. தொடர்ந்து துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கி, 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஆதி திராவிட அருந்ததியர்களிடம் இருந்து ஆதி திராவிட மாணவர்களுக்கு காலி இடங்களை மாற்றும் கலந்தாய்வு செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அந்தத் தேதியுடன் கலந்தாய்வு முடிவடைய உள்ளது. 


இந்த கலந்தாய்வுகளில் 442 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டுள்ளன. ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில்  1,60,780 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பொதுப் பிரிவினருக்கு 148721 இடங்களும் அரசு 7.5 சதவீதப் பிரிவினருக்கு 12059 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்கட்டக் கலந்தாய்வில் தகுதியான 24,976 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், 20,162 மாணவர்கள் கலந்தாய்வில் பங்குபெற்றனர். அதில் 15,139 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, 14,298 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 


அதேபோல இரண்டாம்கட்டக் கலந்தாய்வில் தகுதியான 64,288 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், 49719 மாணவர்கள் கலந்தாய்வில் பங்குபெற்றனர். அதில் 35,476 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, 33,649 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 


3ஆம் கட்டக் கலந்தாய்வு 


3ஆம் கட்டக் கலந்தாய்வும் நடைபெற்று முடிந்த நிலையில், இதற்குத் தகுதி வாய்ந்த 89,695 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், 65,209 மாணவர்கள் கலந்தாய்வில் பங்குபெற்றனர். அதில் 44,431 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, 33,004 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 


இதன்மூலம் பொறியியல் படிப்புகளில் சேர தகுதி வாய்ந்த மாணவர்கள் 1,78,959 பேர் விண்ணப்பித்தனர்.இதில் 1,35,090 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டனர். அதில் 95,046 மாணவர்களுக்கு அவர்களின் தரவரிசைக்கு ஏற்றவாறு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் மொத்தம் 80,951 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். துணைக் கலந்தாய்வு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், பொறியியல் கல்லூரிகளில் சேருவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உள்ளது. இதுவே கடந்த 2022ஆம் ஆண்டு 79,183 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து இருந்தனர். 


7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்தோர் எவ்வளவு?


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், 3 கட்டக் கலந்தாய்வுகளையும் சேர்த்து இந்த ஆண்டு மொத்தம் 28,425 தகுதி வாய்ந்த மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், 20,872  மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 11,058 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, 8475 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இதுவே கடந்த 2022ஆம் ஆண்டு 8263  மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து இருந்தனர். 


இந்த புள்ளிவிவரங்களின் மூலம் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்து உள்ளது தெரிய வருகிறது. 




37 கல்லூரிகளில் ஒற்றை இலக்க மாணவர்கள்


இதுகுறித்து மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறும்போது, ’’16 கல்லூரிகளில் 100 சதவீதம் தங்களின் இடங்களை நிரப்பியுள்ளன. இதில் 4 கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் ஆகும். இதுவே கடந்த ஆண்டு 12 கல்லூரிகள் முழு இடங்களை நிரப்பி இருந்தன. அதே நேரத்தில் 61 கல்லூரிகள் தங்கள் கல்லூரி மொத்த இடங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இடங்களை நிரப்பியுள்ளன. அதிர்ச்சி ஊட்டும் விதமாக 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே (10 இடங்களுக்கும் குறைவாக) மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 


எந்த படிப்புக்கு வரவேற்பு?


கணினி அறிவியல் படிப்பையே அதிக மாணவர்கள் விரும்பி உள்ளனர். அடுத்ததாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் அறிவியல் (AIDS) படிப்பையும், மின்னியல் பொறியியல் மற்றும் ஐ.டி. பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு அதிக வரவேற்பைக் காண முடிகிறது.  


மாணவர்கள் தேர்வு செய்த 45 சதவீத இடங்கள், கணினி அறிவியல் மற்றும் ஐ.டி. சார்ந்த படிப்புகளே’’ என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி  தெரிவித்துள்ளார்.