தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நியமினம் செய்து வருகிறது. ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆட்களைத் தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் முக்கியப் பணியாகும். எனினும் இதற்குத் தலைவர் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் தேர்வுகள், தேர்வு முடிவுகள் வெளியீடு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 


இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு விரைவில் ஓய்வுபெற உள்ளார். அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதற்கு சைலேந்திர பாபு தரப்பில் இதுவரை சம்மதம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றும் தகவல் கசிந்துள்ளது. 


டிஎன்பிஎஸ்சி 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு. இதில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக, நிரப்பப்படாமல் உள்ளாது. எனினும் டிஎன்பிஎஸ்சியில் தற்போது 4 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் பொறுப்பு தலைவராகப் பணியாற்றி வருகிறார். இதில் கிருஷ்ணகுமார் என்னும் உறுப்பினர் இன்றுடன் (ஏப்ரல் 20) ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆகக் குறைய உள்ளது. 


ஜூனில் ஓய்வு பெறும் சைலேந்திர பாபு 


தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு ஜூன் மாதம் ஓய்வுபெற உள்ளார். அதன் பிறகு அவர் விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 62 வயது வரை டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவராகவோ, உறுப்பினராகவோ பதவி வகிக்க முடியும். 




தலைமை தகவல் ஆணையர் ஆகும் இறையன்பு ஐஏஎஸ்?


தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வரும் இறையன்புவும் ஜூன் மாதத்தில் ஓய்வு பெற உள்ளார். ஓய்வுக்குப் பிறகு அவர் தலைமை தகவல் ஆணையர் பதவியைக் கேட்டிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. எனினும் இதுகுறித்து அரசுத் தரப்பிலோ, இறையன்பு தரப்பிலோ எதையும் உறுதி செய்யவில்லை.


இந்த நிலையில் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.  


இதையும் வாசிக்கலாம்: CAPF: மத்திய காவல் படைகளில் என்னென்ன பிரிவுகள்..? ஒவ்வொரு தேர்விற்கும் என்னென்ன வித்தியாசம்..? ஓர் விரிவான அலசல்..!



CAPF Exam: முதல்முறையாக தமிழிலும் சி.ஏ.பி.எஃப் தேர்வு; முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைக்கு இசைந்த மத்திய அரசு