12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட்டைப் பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


மாணவர்கள்‌, தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும்‌ எழுத அவர்கள்‌ பயின்ற பள்ளிக்கு நேரில்‌ சென்று 11.05.2023 (வியாழக்கிழமை) முதல்‌ 17.05.2023 (புதன்கிழமை ) வரையிலான நாட்களில்‌ 14.05.2023 (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11 மணி முதல்‌ மாலை 5 மணிக்குள்‌  விண்ணப்பித்தனர்.


தனித் தேர்வர்களுக்கு...


தகுதியுள்ள தனித்தேர்வர்களும்‌ ஏற்கெனவே பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும்‌ 11.05.2023 (வியாழக்கிழமை) முதல்‌ 17.05.2023 ( புதன்கிழமை) வரையிலான நாட்களில்‌ (14.05.2023 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11 மணி முதல்‌ மாலை 5 மணிக்குள்‌ கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள்‌ வாயிலாக விண்ணப்பித்தனர்.


இதையடுத்து 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வுக்கே வருகை புரியாத தனித் தேர்வர்களுக்கு ஜூன்‌ மற்றும் ஜூலை மாதங்களில் துணைத் தேர்வு நடைபெற உள்ளது. குறிப்பாக ஜூன் 19 ஆம் தேதி முதல்  ஜூன் 24ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.


இதை அடுத்து, மேல்நிலை இரண்டாமாண்டு துணைத்‌ தேர்வெழுத விண்ணப்பித்த‌ தனித் தேர்வர்கள்‌ (தட்கல்‌ உட்பட) தங்களது தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டுகளை 14.06.2023 அன்று பிற்பகல்‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்‌ சென்று முதலில்‌ ஹால் டிக்கெட் என்ற வாசகத்தினை 'க்ளிக்' செய்ய வேண்டும். அதில்‌ தோன்றும்‌ பக்கத்தில்‌ உள்ள “HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JUNE/JULY 2023 - HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை 'க்ளிக்' செய்ய வேண்டும். அதில்‌ தோன்றும்‌ பக்கத்தில்‌ தங்களது விண்ணப்ப எண்‌ அல்லது நிரந்தரப்‌ பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


செய்முறைத்‌ தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத்‌ தனித் தேர்வர்கள்‌ தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின்‌ முதன்மைக்‌ கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்‌. உரிய தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும்‌ தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 


தொடக்கக்‌ கல்வி பட்டயத்‌ தேர்வுக்கு ஜூன் 12 முதல் ஹால் டிக்கெட்


தொடக்கக்‌ கல்வி பட்டயத்‌ தேர்வின்‌ முதலாம்‌ ஆண்டு தேர்வுகள்‌ 23.06.2023 முதல்‌ 12.07.2023 வரையிலும்‌ இரண்டாம்‌ ஆண்டு தேர்வுகள்‌ 22.06.2023 முதல்‌ 11.07.2023 வரையிலும்‌ நடைபெறவுள்ளது.


இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள்‌ (தட்கலில்‌ விண்ணப்பித்த தனித் தேர்வர்கள்‌ உட்பட) இணையதளம்‌ வழியாக 12.06.2023 பிற்பகல்‌ முதல்‌ தங்களின்‌ விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதி விவரங்களை உள்ளீடு செய்து தேர்வுக் கூட அனுமதிச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.