12 ஆம் வகுப்பு தேர்வில் விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவ,மாணவிகள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கிட்டதட்ட 4,08,440 மாணவிகள், 3,52,165 மாணவர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 7,60,606 பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் 3,93,890 மாணவிகள், 3,25,305 மாணவர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 7,19, 196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் ஆகும். இது கடந்தாண்டை விட 0.53 சதவிகிதம் அதிகமாகும். 


12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 397 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சியை எட்டி சாதனைப் படைத்துள்ளது. மாவட்ட அளவில் திருப்பூர் மாவட்டம் 97.45% உடன் முதலிடம் பிடித்தது. 2வது இடத்தை 97.42 % உடன் ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டமும், 3வது இடத்தை 97.15% உடன் அரியலூர் மாவட்டமும் பெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். 


மறுமதிப்பீடு/ விடைத்தாள் நகல் 


அதேசமயம் எதிர்பார்த்த மதிப்பெண் வராத மாணவ, மாணவியர்கள் அதனை ஒரு குறையாக கருதாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனவும் உத்வேகப்படுத்தினர். இப்படியான நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்தும் குறைவான மதிப்பெண் கிடைத்துள்ள பட்சத்தில் மாணவர்கள் மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் ஆகியவற்றை பெறும் வசதி உள்ளது. 


அந்த வகையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று (07.05.2024) காலை 11 முதல் மே 11 ஆம் தேதி மாலை 5 மணி வரை விடைத்தாள் நகல் கோரியும், மறுமதிப்பீடு வேண்டியும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாக மாணவ, மாணவியர்களும்,தேர்வெழுதிய மையங்கள் வழியாக தனித்தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்


இதற்கிடையில் மே 9 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் www.dge.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக சென்று பிறந்த தேதி, பதிவெண் கொடுத்து தாங்களே மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் கட்டணம்


மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தான் மாணவர்கள் பெற முடியும் என்பதால் தாங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க முடியும்.  விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்திற்கு ரூ.275ம், மறுமதிப்பீடு செய்ய உயிரியல் பாடத்திற்கு ரூ.305ம், ஏனைய பாடங்களுக்கு ரூ.205ம்  கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை பள்ளியிலேயே செலுத்தலாம். 


விடைத்தாள்‌ நகல்‌ விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும்‌ ஒப்புகைச்‌ சீட்டினை மாணவர்கள்‌ பாதுகாப்பாக வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. அதில் உள்ள விண்ணப்ப எண்ணை வைத்து விடைத்தாள் நகலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.