தாய் இறந்த துக்கத்திலும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வந்து தாயின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த மாணவரின் மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது.  

Continues below advertisement


திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. இவரது மனைவி சுபலட்சுமி. இந்த தம்பதிக்கு சுனில்குமார் என்ற மாணவர் உள்ளார். யுவாசினி என்ற மகளும் உள்ளார்.


கிருஷ்ண மூர்த்தி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து தாய் சுபலட்சுமியின் அரவணைப்பில்தான் பிள்ளைகள் வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே தாய் சுபலட்சுமிக்கு இதய நோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் கடந்த மார்ச் 3ஆம் தேதி அதிகாலை சுபலட்சுமி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அன்றுதான் சுபலட்சுமியின் மகன் சுனில் குமாருக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்தது. ஏற்கெனவே தாய் இறந்த துக்கத்தில் இருந்த சுனில் குமாருக்கு தேர்வு எழுத வேண்டுமே என்ற எண்ணமும் இருந்துள்ளது.


இதையடுத்து தாய் இறந்த துக்கத்தை மறைத்து சோகத்தை தாங்கி கொண்டு சுனில்குமார் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தேர்வை முடித்து விட்டு வந்து தனது தாயின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.


தேர்வுக்கு சென்றபோது சுனில்குமார் இறந்த தனது தாயின் பாதத்தை தொட்டு ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு சென்றார்.


இதைத்தொடர்ந்து இன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளனர். சுனில்குமார் 375 எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.


'தாய் இறக்காமல் இருந்திருந்தால் இன்னும் அதிக மதிபெண்கள் எடுத்திருப்பேன்'' என சோகமுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அப்பா 6 வருஷத்துக்கு முன்பே இறந்துவிட்டார். அம்மா இப்போதான் இறந்தாங்க. அம்மா இறந்த துக்கத்தில் சரியாக படிக்கவில்லை. இப்போது 375 மதிப்பெண்கள் தான் எடுத்திருக்கிறேன். அம்மா உயிரிழந்த அன்று எழுதிய தேர்வில் 53 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். எனக்கு கப்பல் சம்பந்தப்பட்ட படிப்பு படிக்க ஆசை. அரசாங்கம் உதவ வேண்டும். எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவர் 9ஆம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்கிறார். அவருக்கும் அரசாங்கம் உதவ வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.