தலைநகர் சென்னை, ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் 23ஆம் இடத்தை நோக்கிச் சரிந்துள்ளது. இங்கு மொத்தம் 583 பள்ளிகள் உள்ள நிலையில், 170 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை 30,198 மாணவர்கள் எழுதிய நிலையில், 27,985 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் தேர்ச்சி விகிதம் 92.67 ஆக உள்ளது. மாணவிகளைப் பொறுத்தவரை, 34,092 பேர் தேர்வை எழுதிய நிலையில், அதில் 32729 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்த சென்னையின் தேர்ச்சி விகிதம் 94.44 சதவீதமாக உள்ளது.
கவலை அளிக்கும் அரசுப் பள்ளிகள்
சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. 38 மாவட்டங்களில் 33ஆம் இடத்தை சென்னை அரசுப் பள்ளிகள் பிடித்துள்ளன. பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் கடுமையாகச் சரிந்துள்ளது. இங்குள்ள 86 அரசுப் பள்ளிகளில் வெறும் 3 பள்ளிகள் மட்டுமே நூறு சதவீதத் தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
5,805 மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதிய நிலையில், அதில் 4,782 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்ச்சி வீதம் 82.38 ஆக உள்ளது. சென்னை அரசுப் பள்ளி மாணவிகள் 8689 தேர்வை எழுதிய நிலையில், 7952 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 91.52 தேர்ச்சி விகிதம் ஆகும். இதனால் ஒட்டுமொத்த சென்னை அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.86 ஆக உள்ளது.
அதேபோல பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் 88.12% தேர்ச்சி பதிவாகி உள்ளது.
கடந்த ஆண்டில் எப்படி?
கடந்த 2023-24ஆம் ஆண்டில் சென்னை பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 94.48 ஆக உள்ளது. அதேபோல அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.47 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநிலம் முழுவதும் தமிழக பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் 95.06 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அறிவியப் பாடப் பிரிவுகளில் குறைந்த தேர்ச்சி
தேர்வு முடிவுகளில் அறிவியல் பாடப் பிரிவுகளில் தேர்ச்சி விகிதமும் சதங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது. அதே நேரத்தில் வணிகவியல் பாடப் பிரிவுகளில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதேபோல மாவட்ட அளவில் அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த பாரதிய வித்யா பவன் பள்ளி மாணவி ஓவியாஞ்சலி, 600-க்கு 599 மதிப்பெண்களைப் பெற்று உள்ளார். அதேபோல, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் என்ற மாணவரும் 599 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். பல்லடத்தைச் சேர்ந்த இவர், வணிகப் பாடப் பிரிவு மாணவர் ஆவார்.