பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன. ’இந்த வகுப்புகள்தான் உங்களுக்கு மிக முக்கியமானவை என்றும் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியவை; அதனால் இந்த வகுப்பில் நீங்கள் பெறும் மதிப்பெண்கள் மிகவும் அவசியம்’ என்று உங்களுக்கு வகுப்பறையில் ஏகப்பட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கும்.
மதிப்பெண் இருந்தால் மட்டும் போதுமா?
மதிப்பெண்கள் குறைந்து போனதற்காக பலர் வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள். சிலர் அழுது புலம்புவார்கள். சில பெற்றோர்கள் திட்டித் தீர்ப்பார்கள். ஆனால், இவை எதுவுமே அவசியமில்லை. மதிப்பெண்கள் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
நிறைய மாணவர்கள் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து படித்துவிட்டு சிறப்பான ஒரு கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பட்டம் வாங்கி, பிறகு வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். அதற்குப் பிறகு ஒரு முடிவு எடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு எழுத வருகிறார்கள். நன்றாக கவனிக்க வேண்டும் . குரூப்4 தேர்வு எழுதுவதற்கு பத்தாம் வகுப்பு படிப்பு போதுமானது. அதிக மதிப்பெண்கள் எடுத்து அதிகம் சிரமப்பட்டு உயர் கல்வி படித்து முடித்து திரும்பவும் குரூப் 4 வருகிறார்கள். இதுதான் இன்று எழுபது சதவீதம் நடைமுறையில் இருக்கிறது.
ஏதேனும் ஒரு டிகிரி போதுமே
அதுபோலவே பொறியியல் படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள். இப்போது வங்கித் தேர்வுகளை எழுதி வங்கிப் பணியாளர்களாக உள்ளே வருகிறார்கள் இவர்கள் பொறியியல் படிப்பதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். பிறகு மிக நன்றாகப் படித்து பொறியியல் முடித்திருக்க வேண்டும். இத்தனைக்குப் பிறகும் திரும்பவும் அவர்கள் வங்கித் தேர்வுக்கு வருகிறார்கள். வங்கிப் பணித் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதுமானது.
மிகவும் சிரமமில்லாமல் சாதாரணமாக ஒரு டிகிரி படித்துக் கொண்டே தேர்வுக்கு தயார் செய்தால் வங்கித் தேர்வில் எளிமையாக தேர்ச்சி பெற்று விடலாம். ஆக மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களும் பிறகு அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. இப்போது முக்கியத்துவம் கொடுத்து பேசப்படும் மதிப்பெண்கள் எதிர்காலத்தில் பலனே இல்லாமல் போய் விடலாம் என்பதை முக்கியமாக பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மிகப்பெரிய படிப்பாக கருதப்படும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்பில் பெறும் மதிப்பெண்கள் முக்கியமில்லை. அதற்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்தால் போதும். ஐஏஎஸ் தேர்வில் அதிலும் முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள்தான் உங்களுடைய கேடரை தீர்மானிக்கும். தனியார் நிறுவனங்கள் கூட உங்களது மதிப்பெண்களைப் பார்த்து வேலைக்கு எடுப்பதில்லை. உங்கள் திறமையைப் பார்த்துதான் வேலைக்கு எடுக்கிறார்கள். 90 சதவீத அரசுப் பணிகள் போட்டித் தேர்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன. மேற்படிப்புக்கும் நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டும். இப்படி எந்த ஒரு வகையில் பார்த்தாலும் பத்து பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் என்பது அத்தியாவசியமில்லை.
எந்தத் துறையில் சென்றாலும் வெற்றி கிடைக்கும்
இன்று தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) படித்த பல பேர், பல உயர் பதவிகளில் இருந்து விட்டு இயற்கை விவசாயமே சிறந்தது என்று திரும்பி வருகிறார்கள். இயற்கை விவசாயத்தில் அவர்கள் வெற்றி பெறவும் செய்கிறார்கள். ஆனால் படித்தது தகவல் தொழில்நுட்பம். ஒரு பக்கம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும்பொழுது இன்னொரு பக்கம் இயற்கை விவசாயப் பணிகள் மேம்பட்டு வருகின்றன. இரண்டு எக்ஸ்ட்ரீம்களிலும் ஒருவரே ஜெயிக்க முடிகிறது. எனவே எந்தத் துறையில் சென்றாலும் வெற்றி கிடைக்கும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைக்கு மாணவர்கள் எளிதாக கையாளும் முகநூல் பக்கமும், வாட்சப் வசதிகள், மீம்ஸ், இன்ஸ்டகிராம் என்று எதுவுமே தெரியாத எத்தனையோ பேர் சட்டமன்ற உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்து நம்மை ஆட்சி செய்கிறார்கள். பலர் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவர்கள். அவர்கள் தங்களின் வேறு திறமைகளால் வெற்றி பெறுகிறார்கள். சொல்ல வருவது என்னவென்றால் மதிப்பெண்கள் பெறுவது என்பது வேறு, வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது வேறு.
புதிய பயணத்தை தொடருங்கள்:
ஒருவேளை நீங்கள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தோல்வி அடைந்து இருந்தாலும் கூட உங்களுக்காகத் தொழில்கல்வி படிப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுங்கள். எனவே தோல்வி அடைந்தாலும் உங்கள் பயணத்தை புதிய பாதையில் தொடருங்கள். குறைந்த மதிப்பெண்களுக்காக யாராவது உங்களை குறை கூறினால் கவலைப்படாதீர்கள். அவர்களுக்கு முன்பு வெற்றி பெற வேண்டும் என்று வெறியேற்றிக் கொள்ளுங்கள்.
உடல்நிலை சரியில்லாமல் சில சமயம் தேர்வவை சரியாக எழுதாமல் போய் இருக்கலாம். மீண்டும் உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உடனடியாக நீங்கள் உயர்கல்வியில் சேரலாம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் அல்லது தோல்வி அடைந்தவர்களுக்கு ஐடிஐயில் சிறந்த தொழில் பயிற்சிகள் வழங்குகிறார்கள். பயிற்சி முடித்த பிறகு அரசு கடன் கிடைக்கவும் உதவி செய்கிறார்கள்.
அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். நீங்கள் உங்கள் லட்சியப் பாதையை மாற்றிக் கொள்ளாமல் உங்கள் பயணத்தை தொடருங்கள்.
நிறைவாக ஒன்று:
தேர்வு முடிவுகள் எப்படி இருந்தாலும் அதனை ஒரு பக்கம் வைத்து விட்டு முக்கியமான குணங்களை கைக்கொள்ளுங்கள். வெற்றிக்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை, கடின உழைப்புதான் வெற்றிக்கான வழி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தாங்கள் விரும்பும் விஷயத்திற்காக கடினமாக உழைப்பதற்கு மாணவர்கள் பழக வேண்டும். அவசரமான இந்த உலகத்தில் அடுத்தவர்களை கீழே தள்ளிவிட்டு முன்னேறுவதையே பலரும் செய்கிறார்கள். அப்படி யாரையும் வீழ்த்தி விட்டு நாம் வெற்றி பெறக் கூடாது. பணம், அந்தஸ்து, வாழ்க்கை முறை என்று எதையும் பிரித்து யாரையும் அவமானப்படுத்தக் கூடாது.
குழுவாக இணைந்து வெற்றி பெறுவது நல்ல பலன்களைத் தரும் என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ளுங்கள். சக மாணவருடன் விட்டுக் கொடுத்தும் தட்டிக் கொடுத்தும் தரும் வெற்றிகள் உயர்வானவை என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுகளையும் சண்டைகளையும் பெரியவர்களை விட மாணவர்களாகிய நீங்கள் சீக்கிரமே மறந்து விடுகிறீர்கள். கோபத்தில் அடுத்தவர்கள் பேசும் வார்த்தைகளையும் நீங்கள் எளிதில் மன்னித்து விடுகிறீர்கள். இந்த விஷயத்தில் இந்த குழந்தை மனதை எப்போதுமே பத்திரமாக வைத்திருங்கள். அது போதும் இந்த வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு.
எனவே தேர்வு முடிவு என்பது வாழ்க்கைக்கான முடிவு அல்ல. அது புதிய வாழ்க்கைக்கான தொடக்கம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
- கட்டுரையாளர் ஆதலையூர் சூரியகுமார்.