பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி 25.03.24 வரையிலும் நடைபெறுகிறது. நெல்லை மாவட்டம் மூன்று கல்வி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையில் 28 தேர்வு மையங்களும், வள்ளியூரில் 29, சேரன்மகாதேவி 12 என மொத்தம் 69 தேர்வு எழுதும் மையங்கள் உள்ளன. இதில் தனித்தேர்வர்கள் தேர்வெழுதும் மையம், மத்திய சிறைவாசி தேர்வு மையம் உள்ளிட்டவைகள் சேர்த்து மொத்தமாக மூன்று கல்வி மாவட்டத்திலும் 70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 20,172 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதில் 8,853 மாணவர்கள், 11,319 மாணவிகள் ஆவர். தேர்வை கண்காணிக்க பறக்கும் படை குழுவில் 125 ஆசிரியர்களும், சிறப்பு பறக்கும் படை குழுவில் 16 ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளராக 1328 ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் மொத்தமாக 1963 ஆசிரியர்கள் இந்த பொது தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்வு மையங்களில் தேர்வு எழுத வருபவர்கள் கண்காணிப்பாளர்கள் தவிர மற்ற வெளி நபர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் தேர்வு கண்காணிப்பாளர் உட்பட அதிகாரிகள் ஆசிரியர்கள் என யாரும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக வழங்கிடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு தயார் செய்யப்பட்டு நெல்லை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவற்றை அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பாக முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள சூழலில் வினாத்தாள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைத்ததுடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தேர்வு நாளான இன்று பாதுகாப்பு அறையில் உள்ள வினாத்தாள் தேர்வு மையங்களுக்கு பத்திரமாக எடுத்துச் செல்வதற்கான பிரத்தியேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி காணொளி காட்சி வாயிலாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார், அப்போது ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளில் உள்ள தேர்வு அறை மற்றும் கண்காணிப்பாளர் அறை தவிர்த்து அனைத்து அறைகளும் பூட்டபட வேண்டும். டீ, காபி வடை என எதையும் கொடுக்க தேர்வு நடைபெறும் மையத்திற்கு வரக்கூடாது. தேர்வு தலைமை கண்காணிப்பாளர் தேர்வு மேற்பார்வையாளர் என யாரும் பொது தேர்வு நடைபெறும் மையத்தில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தக் கூடாது. தேவை எனில் பட்டன் ஃபோன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வு அறை தொடர்பாக மாணவ மாணவிகளுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளையும் வழங்கினார்.