பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு நாளை (மே 12ஆம் தேதி) முதல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான மாநிலக் கல்வி வாரியத்துக்கான 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகின. இதில் மாணவ- மாணவிகள் 95.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். வழக்கம்போல மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர். அரியலூர் மாவட்டம், மாநில அளவில் முதலிடம் பெற்று இருந்தனர்.
மார்க் ஷீட்டைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?
மார்ச் - 2025 பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) நாளை (12.05.2025) காலை 11.00 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
இணையம் மூலம் பெறலாம், எப்படி?
தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification பகுதியில் சென்று HSE -II Year March- 2025 -Statement of Marks பக்கத்தில் தங்களின் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தனித் தேர்வர்களுக்கு எப்படி?
தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம். தேர்வர்கள் Notification பகுதியில் சென்று HSE -II Year March- 2025 - Statement of Marks பக்கத்தில் தங்களின் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் முதல் விடைத்தாள் நகல்
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் நாளை 13.05.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் 17.05.2025 (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிப்பதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in